தற்போதைய செய்திகள்

ஆவடி பருத்திபட்டு ஏரியில் படகு சவாரி துவக்கம் – அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்

ஆவடி பருத்திபட்டு ஏரியில் படகு சவாரியை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

அம்மா அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஆவடியில் இயற்கை சூழலுடன் பருத்தி பட்டு ஏரி புனரமைக்கப்பட்டு படகு குழாம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இந்த ஏரியில் சுற்றுசுவர், நடைபாதை, பறவைகள் தங்கிச் செல்வதற்கான இரண்டு தீவுகள், பசுமை பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனியாக கழிவறைகள், அங்காடிகள், மின்விளக்குகள், படகு குழாம் ஆகியவை ரூ.28.16 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த பருத்திப்பட்டு ஏரியில் படகு குழாம் பணிகள் முடிக்கப்பட்டு படகு சவாரியை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்து சிறுவர், சிறுமிகளுடன் படகு சவாரி மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்று பருத்திபட்டு ஏரியில் படகு சவாரி தொடங்கியதன் மூலம் அம்மாவின் லட்சிய கனவு நினைவானது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் பல வார்டுகளில் போட்டியின்றி கழகத்தை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதே நிலை தான் அடுத்து வரும் தேர்தலிலும் இருக்கும். மக்களுடைய ஆதரவு மிகப்பெரிய அளவில் இருப்பதை நாங்கள் நம்புகிறோம். எங்களை பொறுத்தவரை எங்களுடைய சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நெஞ்சு நிமிர்ந்து வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறோம். தி.மு.க.வை போல் தூரத்தில் நின்று வாக்F கேட்கவில்லை. அவர்கள் எப்படி வாக்கு கேட்பது என்று தெரியாமல் எப்படியாவது தடை வாங்க வேண்டும். தேர்தலை நிறுத்த வேண்டும் என நினைத்தார்கள். அது மக்களுக்கு தெரியும். அதனால் தி.மு.க. தோல்வியை தழுவக்கூடிய கட்சி. நாங்கள் வெற்றி கட்சியாக வெற்றி கூட்டணியாக வாக்குகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் கூட்டணி கட்சி நல்ல ஒரு வெற்றியை பெறுவோம் என நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.