திருப்பூர்

கொடுப்பதை கெடுப்பவர்கள் எப்படி நன்மை செய்வார்கள்- பொள்ளாச்சி வி.ஜெயராமன் கேள்வி

திருப்பூர்:-

கொடுப்பதை கெடுப்பவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம் குரல்குட்டை தும்பலப்பட்டி மானுப்பட்டி கல்லாபுரம் எலையமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலராக போட்டியிடும் ஆர்.ஜி.ஜெகநாதன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் போட்டியிடும் எம்.சாரதா தேவி மனோஜ் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.கிட்டு(எ)கிருஷ்ணசாமி ஆகியோரையும், மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களையும் ஆதரித்து திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி. ஜெயராமன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உள்ளாட்சித்தேர்தலை நிறுத்த உச்சநீதிமன்றம் சென்று ஸ்டாலின் போராடினார். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி இத்தேர்தல் நடைபெறுகிறது. உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்ற அரசு அம்மா அவர்களின் அரசு. நலத்திட்டங்கள் மற்றும் பொங்கல் பரிசு பொருட்களைக் கூட தடுத்த தி.மு.க.வினர் உங்களுக்கு எப்படி நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த ஆண்டு தேர்தல் வருகின்ற காரணத்தினால் முதல்வர் பொங்கல் பரிசு வழங்குவதை முன்கூட்டியே அறிவித்து விட்டார்.

இப்போதும் தி.மு.க.வினர் நீதிமன்றம் சென்று தேர்தல் முடியும் வரை வழங்கக்கூடாது என்று தடையாணையை பெற்று விட்டனர். தேர்தல் முடிந்த பிறகு நிச்சயம் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் இங்கே தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும், சட்டமன்ற உறுப்பினரும், நானும் சேர்ந்து இப்பகுதிக்கு என்னென்ன தேவையோ முதலமைச்சரிடம் கேட்டு பெற்று இந்த ஊராட்சி ஒன்றியத்தை தன்னிறைவு அடைந்த ஊராட்சி ஒன்றியமாக மாற்றுவோம்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

பிரச்சாரத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் கே. லியாக்கத் அலிகான், கழக இலக்கிய அணி துணை செயலாளர் எம்.முருகேசன், கழக பொதுக்குழு உறுப்பினர் எம்.கண்ணாயிரம், வக்கீல் கண்ணன், உடுமலை சிதம்பரநாதன், போகநாதன், சற்குனசாமி, லயன் நடராஜ், முருகநந்தன், விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.