மற்றவை

தினகரன் கட்சி விரைவில் காணாமல் போய் விடும் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

மதுரை

டி.டி.வி.தினகரன் கட்சி விரைவில் காணாமல் போய்விடும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை தனக்கன்குளம், பர்மா காலனி, கீழக்குயில்குடி ஆகிய பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் 125-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாமல் தடுக்க பார்க்கிறார். மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். ஏனென்றால் மக்கள் விரும்பும் ஆட்சியை இன்றைக்கு முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகிறார்.

ஸ்டாலின் எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் அதனை சட்ட வழியில் வென்று அம்மாவின் அரசு நிச்சயம் உள்ளாட்சி தேர்தலை நடத்திக் காட்டும். தாய் கழகத்திற்கு வந்து சேர்ந்துள்ள அனைவரும் சிறப்பாக கழக பணியாற்றுங்கள். உங்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உருவாக்கித் தருவார்கள்.

டி.டி.வி.தினகரனை நம்பி போன சட்டமன்ற உறுப்பினர்கள் நிலைமை என்ன என்பதை அனைவரும் அறிவார்கள். தற்போது அந்த கட்சியில் இருந்து நாள்தோறும் நிறைய பேர் விலகி கழகத்தில் இணைந்து வருகின்றனர். எனவே விரைவில் தினகரன் கட்சி காணாமல் போய்விடும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.