தற்போதைய செய்திகள்

மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. – ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேச்சு

தேனி

தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது தி.மு.க. கூட்டணி. ஆனால் மக்களுக்காகவே உழைக்கும் இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே என்று ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசினார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி, அய்யம்பட்டி, எர்ணம்பட்டி, காமாட்சிபுரம், அழகாபுரி, சீப்பாலக்கோட்டை, பூலானந்தபுரம், எரசை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் வசந்தாநாகராஜ், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆகியோரை ஆதரித்து தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலிருந்து வித்தியாசமானது. இத்தேர்தலில் நிற்பவர்கள் நமது பகுதியில் இருக்க வேண்டும். நமது அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தருபவராக இருக்க வேண்டும். முல்லை பெரியார் அணையில் கேரள அரசுக்கு ஜால்ரா போட்டு நமது உரிமையை விட்டு கொடுத்தவர்கள் திமுக-காங்கிரஸ் கட்சி. அவர்கள் வாக்கு கேட்பதற்கு மட்டுமே வருபவர்கள். ஆனால் மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அ.இ.அ.தி.மு.க. மட்டுமே.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முல்லை பெரியார் அணையில் நமது உரிமையை மீட்டெடுத்து 142 அடி வரை நீரை தேக்கிக் கொள்ளும் உரிமையை பெற்றார். 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக- காங்கிரஸ் கட்சியினர் நமது பகுதிக்கு தொழிற்சாலை உள்ளிட்ட எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. நாடாளுமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவேன்.

இவ்வாறு ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசினார்.

இப்பிரச்சாரத்தின் போது கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், சின்னமனூர் நகர செயலாளர் கண்ணம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.