சிறப்பு செய்திகள்

சொந்த ஊரில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர்

சேலம்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக வீட்டில் இருந்து குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்று மக்களோடு மக்களாக நின்று வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். அவருக்கு சேலம் விமான நிலையத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அங்கிருந்து காரில் தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு சென்றார்.

பின்னர் தனது குடும்பத்தாருடன் நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்திற்கு பகல் 12.25 மணி அளவில் சென்றார். அங்கு சிறிது தூரம் குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்றார். அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றபோது அவரை உள்ளே சென்று வாக்களிக்குமாறு வரிசையில் நின்றவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் முதலமைச்சர் அதை ஏற்க மறுத்து வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் மக்களோடு மக்களாக காத்து நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் அவரது மனைவி ராதா, மகன் மிதுன்குமார், மருமகள் சங்கீதா ஆகியோரும் வந்து வாக்களித்தனர். முதலமைச்சர் வாக்களிக்க வந்ததை தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெடுங்குளம் கிராம ஊராட்சிக்கான 9 வார்டு உறுப்பினர்களும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகி விட்ட நிலையில் நெடுங்குளம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.வாக்களித்த பின்னர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.