தற்போதைய செய்திகள்

எடப்பாடியாரின் சிறந்த ஆளுமையால் தமிழகம் முதலிடம் பிடித்து இருக்கிறது – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பெருமிதம்

விருதுநகர்

எடப்பாடியாரின் சிறந்த ஆளுமையால் தான் தமிழகம் முதலிடம் பிடித்து இருக்கிறது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர் ஒன்றிய பகுதிகளுக்கு நாளை (30-ந்தேதி) உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் கழக ஆட்சியில்தான் தாமிரபரணி குடிநீர் கொண்டு வரப்பட்டது. தற்போது ஒன்றிய பகுதி முழுவதிலும் தாமிரபரணி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

விடுபட்ட ஒரு சில பகுதிகளுக்கு விரைவில் குடிநீர் வழங்கப்படும். ஒரு காலத்தில் தாமிரபரணி தண்ணீரை கொடுக்க முடியுமா என்று கேட்டார்கள். ஆனால் நாங்கள் தாமிரபரணி தண்ணீரை சொன்ன வாக்குறுதிப்படி கொடுத்து விட்டோம். மேலும் பல்வேறு திட்டங்களை இந்த பகுதியில் செயல்படுத்த உள்ளோம்.

ஆளும் கட்சியான கழக வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களித்தால் தான் உங்க கிராமங்களுக்கு ஏராளமான திட்டங்கள் கிடைக்கும். நாங்கள் நல்ல மனிதாபிமான உள்ள வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளோம். எடப்பாடியாரின் சிறந்த ஆளுமையால் தான் நிர்வாக ரீதியாக தமிழகம் இன்று முதல் இடம் பிடித்துள்ளது.

பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கும் அரசு கழக அரசு. எல்லா திட்டங்களும் ஏழை, எளிய மக்களுக்கு எளிய முறையில் கிடைக்கும் வகையில் ஆளும் கட்சி சிறப்பாக செய்து வருகிறது. வாக்காளர்கள் உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.