தற்போதைய செய்திகள்

மதுரை மருதங்குளத்தில் ரூ.10 லட்சத்தில் பாலம் – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ உறுதி…

மதுரை:-

மதுரை மருதங்குளத்தில் ரூ.10 லட்சத்தில் பாலம் கட்டி தரப்படும் என்று வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி அளித்துள்ளார்.

மதுரை வடக்கு தொகுதியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை மனுக்களாக மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா பெற்றுக்கொண்டார். இதனை ஒட்டி அன்னை தெரசா நகரில் உள்ள மருதங்குளம் பகுதியில் பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். அதனை ஒட்டி உடனடியாக ஆய்வு மேற்கொண்டு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன்பின் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கூறியதாவது :-

இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் கடைக்கோடி கிராமங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் சாலை வசதிகள், மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள ஏரி கண்மாய் தூர்வாரப்பட்டு வருகிறது. மதுரையில் பல ஆண்டு காலம் தூர் வாரப்படாமல் இருந்த செல்லூர் கண்மாய் தூர்வாரப்பட்டு உள்ளது. அதேபோல் மதுரை வண்டியூர் கண்மாய் தூர்வாரப்படுகிறது. இதன்மூலம் மதுரையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் அண்ணாநகர் முருகன் ஜெயவேல், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் மாவட்ட உறுப்பினர் அபுதாகிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.