சிறப்பு செய்திகள்

73-வது சுதந்திர தினவிழா – கோட்டை கொத்தளத்தில் நாளை முதலமைச்சர் கொடி ஏற்றுகிறார்

சென்னை:-

கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியகொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.  கோயில்களில் நடைபெறும் பொது விருந்துகளில் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். பின்னர் அவர் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். முன்னதாக போர் நினைவு சின்னத்தில் இருந்து முதலமைச்சர் திறந்த ஜீப்பில் கோட்டை கொத்தளத்துக்கு செல்கிறார். அப்போது முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

கோட்டை முகப்பில் முதலமைச்சரை தலைமை செயலாளர் வரவேற்று அழைத்து செல்கிறார். கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றும் முன் முப்படை தளபதிகளை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைக்கிறார். அதற்கு பின்னர் தேசியகீதம் முழங்க தேசியகொடியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் பல்வேறு வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். சுதந்திர திருநாள் அன்று கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெறுவது வழக்கம். அதற்காக முதலமைச்சர் இன்று கே.கே.நகரில் உள்ள ஆலயத்தில் பொது விருந்தில் கலந்து கொள்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் பொது விருந்தில் பங்கேற்கிறார்.