தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது

சென்னை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்  மாலையுடன் நிறைவடைந்தது.

சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. முதல்கட்ட வாக்குப்பதிவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது குடும்பத்துடன் சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோல் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி குள்ளம்பாளையத்தில் வாக்களித்தார். ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டு போட்டனர். முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 76.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதற்கிடையே இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4924 கிராம ஊராட்சி தலைவர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தம் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இதற்காக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். பிரச்சாரம் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் காலையில் இருந்தே வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மதியம் இடைவெளி இல்லாமல் உணவு கூட அருந்தாமல் பிரச்சாரம் தொடர்ந்தது. மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவுற்றது. உடனடியாக அந்தந்த பகுதியில் தங்கியிருந்த வெளியூர் நபர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.

மாலை 5 மணிக்கு பிறகு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கவனித்து வருகின்றனர். வாக்குச்சீட்டு, ஓட்டுபெட்டி உள்ளிட்ட பொருட்களை இன்று மாலைக்குள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.