தமிழகம்

ஜூன் மாத விலையில்லா பொருள் வழங்க ரூ.219 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை

நியாய விலைக்கடைகளில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வழங்க ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24-ம்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வழங்க உத்தரவிட்டதோடு நிவாரண தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள 2 கோடியே ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 837 அரிசி அட்டைகளில் ஒரு கோடியே 98 லட்சத்து 61 ஆயிரத்து 635 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை பெற்று பயனடைந்துள்ளனர். 99 சதவிகிதம் பேர் தங்களுக்கான ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை பெற்றுள்ளனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மே மாதத்திற்கான பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 5-ம்தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
ஏப்ரல், மே மாதம் வழங்கப்பட்டது போல ஜூன் மாதத்திற்கும் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் படி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அரிசி மற்றும் சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்க, 219 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரத்து 487 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.