தற்போதைய செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்புக் கடனுதவி திட்டம் – அறிமுகம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

சென்னை

மகளிர் சுய உதவிக்குழுக்களின் அவசர தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கொரோனா சிறப்புக் கடனுதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நேற்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் கூடுதல் பதிவாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பையொட்டி கூட்டுறவுத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் விநியோகம், முதலமைச்சரால், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், கூட்டுறவுத்துறை அமைச்சரால் மானிய கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்திவரும் நிலையில், ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் தங்குதடையின்றி கிடைத்திட முதலமைச்சர் உத்தரவிட்டதற்கிணங்க, கூட்டுறவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் 32,962 நியாயவிலைக் கடைகளில் முதலமைச்சரின் ஆணைப்படி கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக அரிசி பெறும் 1,98,72,808 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கப்பட்டது.

மேலும், ஏப்ரல் மாதத்தில் கொரோனா ரொக்க நிவாரணம் பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு நியாயவிலைக் கடைகளின் வாயிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்பட்டது.

இதில் 3,02,487 மெ.டன் அரிசி, 19,641 மெ.டன் பருப்பு, 19,497 கிலோ லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் 28,808 மெ.டன் சர்க்கரை வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதே பொருட்களை மே மாதத்திற்கும் வழங்கிட முதல்வர் உத்திரவிட்டதற்கிணங்க, 10.05.2020 வரை 3,04,943 மெ.டன் அரிசி, 13,068 மெ.டன் பருப்பு, 14,072 கிலோ லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் 19,831 மெ.டன் சர்க்கரை வழங்கப்பட்டுள்ளது. இதே நடைமுறையினை ஜூன் மாதத்திற்கும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை அட்டைதாரர்களின் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு விலையின்றி வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இத்துடன் மாநில அரசின் சொந்த நிதியாதாரம் மூலம் முன்னுரிமையற்ற அரிசி பெறும் அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு விலையின்றி வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் திங்களுக்கான கூடுதல் விலையில்லா அரிசியினை மே மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு தவணையாக குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் முதலமைச்சரால் தமிழகம் முழுவதும் கடந்த 2019-20-ம் ஆண்டில் பயிர்கடன் குறியீடாக ரூ.10,000 கோடி நிர்ணயிக்கப்பட்டு, 31.03.2020 வரை 13,02,412 விவசாயிகளுக்கு ரூ.9,352.13 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2020-21) பயிர்க்கடன் குறியீடு ரூ.11,000 கோடி நிர்ணயிக்கப்பட்டு 30.04.2020 வரை 10,481 நபர்களுக்கு ரூ.78.30 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நடப்பாண்டில் பயிர்க்கடனை தாமதமின்றி வழங்க கூட்டுறவுச் சங்கங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களில் யூரியா 28,104 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 23,901 மெட்ரிக் டன்னும், எம்.ஓ.பி 15,178 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 30,212 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 97,395 மெட்ரிக் டன் உரம் கையிருப்பில் உள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12,292 மெட்ரிக் டன் உரம் கையிருப்பில் உள்ளது.

கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் 116 அம்மா மருந்தகங்கள் மற்றும் 173 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 31.03.2020 வரை ரூ.962.50 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் அவசரக் கடன் தேவையினை பூர்த்தி செய்யும் விதமாக கொரோனா சிறப்புக் கடனுதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் 30.09.2020 வரை ஒரு உறுப்பினருக்கு ரூ.5000 வரையும், ஒரு குழுவிற்கு ரூ.1 லட்சம் வரையும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதிவாய்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக கூட்டுறவு நியாயவிலைக்கடைகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வருகை தரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் (Containment Zone) செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்திடவும், கிருமிநாசினி, சோப்பு, பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் போன்றவைகள் தேவைப்படும் அளவிற்கு வைத்துக்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் எவ்வித சுணக்கமுமின்றி தொடர்ந்து பணியாற்றி வரும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்பிரமணியம், கூடுதல் பதிவாளர்கள் ஆர்.ஜி.சக்தி சரவணன், கே.ஜி.மாதவன், பா.பாலமுருகன், இரா.பிருந்தா, ம.அந்தோணிசாமி ஜான் பீட்டர், டாக்டர்.எஸ்.செந்தமிழ் செல்வி, வெ.லெட்சுமி, டாக்டர் டி.அமலதாஸ், கோ.செந்தில்குமார், எம்.முருகன், டாக்டர்.கேவி.எஸ்.குமார் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.