தற்போதைய செய்திகள்

ஜூன் 1-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 12-ம்தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும். சுகாதார துறையினரின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.10-ம்வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை முதலமைச்சர் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

இதன்படி, ஜூன் 1-ந்தேதி மொழிப்பாடம், ஜூன் 3-ந்தேதி ஆங்கிலம், ஜூன் 5-ந்தேதி கணிதம்,ஜூன் 6-ந்தேதி விருப்ப மொழிப்பாடம், ஜூன் 8-ந்தேதி அறிவியல், ஜூன் 10-ந்தேதி சமூக அறிவியல், ஜூன் 12-ந்தேதி தொழிற்பிரிவு தேர்வுகள் நடைபெறும். கடந்த மார்ச் 26-ம்தேதி நடைபெற்ற பிளஸ் 1 வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்கள், ஜூன் 2-ம்தேதி அத்தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே விடுபட்ட பிளஸ் 1 தேர்வு, ஜூன் 4-ம்தேதி நடைபெறும். மார்ச் 24-ம்தேதி நடைபெற்ற பிளஸ்2 தேர்வை 34 ஆயிரத்து 842 பேர் வாகனங்கள் குறைவால் எழுத முடியவில்லை என்ற செய்தி வெளியானது. அவர்கள் மீண்டும் ஜூன் 4-ம்தேதி அத்தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது. வரும் 27-ம் தேதியிலிருந்து 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்துவிதமான சுகாதார வசதிகளும் செய்து தரப்படும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளும் தேர்வுகளின் போது எடுக்கப்படும். பள்ளி திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கியம் என்பதால் நடத்தப்படுகிறது. தேர்வு நடத்துவதில் மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 1 கோடியே 42 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். அதற்கு ஏற்ப பள்ளி அறைகள் உள்ளன. இப்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 35 ஆயிரம் தான். எனவே இடவசதி தாராளமாக போதும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக வரும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மெட்ரிக் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25% நிதியை தமிழக அரசு அளித்திருக்கிறது. ஏறத்தாழ ரூ.218 கோடி நிதி நேரடியாக வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களைத் துன்புறுத்தவும், மன உளைச்சலையும் ஏற்படுத்தக் கூடாது என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் பயிற்சியைப் பொறுத்தவரையில் 2,000 ஆசிரியர்களுக்கு இருவார காலம் முதலில் பயிற்சி நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதத்தில் ஆர்வம் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 கல்லூரிகளில் பயிற்சி அளிக்க வசதி செய்துள்ளோம். தங்கும் வசதி, உணவு வசதியும் ஏற்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.