தற்போதைய செய்திகள்

மதுரை இராஜாஜி மருத்துவமனையில் 180 பேருக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 180 பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் 180 பணியாளர்களுக்கு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் தலைமையில், நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக, அரசு இராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த பல்நோக்கு மருத்துவமனை வளாகம் (SSB) 650 எண்ணிக்கையிலான படுக்கைகள் வசதியுடன் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இச்சிகிச்சை அளிப்பதற்கென கீழ்கண்டவாறு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம்சாரா பணியாளர்கள் ஆகியோர் கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டு குழுவுக்கு 6 மணிநேரம் பணிநேரமாக நிர்ணயித்து, 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. ஒரு குழுவில் தலைமை மருத்துவர்-1, உதவி பேராசிரியர்-1, முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்கள்-7, செவிலிய கண்காணிப்பாளர்-1, செவிலியர்கள்-7, மருந்தாளுநர்கள்-3, அடிப்படை பணியாளர்கள்-8, ஆய்வக நுட்புநர்-8, நுண்கதிர் வீச்சாளர்-1, ECG நுட்புநர்-1 ஆகியோர் உள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் நோய் கண்டறிதல் பொருட்டு, நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்படும் சளி மாதிரிகளை (SWAB SAMPLE) பரிசோதனை செய்வதற்கென ஆசியாவிலேயே மிகப்பெரிய நுண்ணுயிரியியல் ஆய்வகமான மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் பேராசிரியர்-1, இணை பேராசிரியர்-1, உதவி பேராசிரியர்கள்-2, சையிண்டிஸ்ட்-1, ஆய்வக நுப்புநர்-5 ஆகிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழு 6 மணிநேர பணிகால இடைவெளியில், நாள்தோறும் நான்கு குழுக்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த ஆய்வகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இதுவரை சுமார் 14,000க்கும் மேல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 8,698 எண்ணிக்கையிலான மாதிரிகளும், அரசு இராஜாஜி மருத்துவமனையில் 1,454 எண்ணிக்கையிலான மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசின் வழிகாட்டுதலின்படி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கை சுத்திகரிப்பான் (HAND SANITIZER) திரவமானது, மதுரை மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த மருந்தியல் கல்லூரியில் தயாரிப்பு செய்வதற்கென தனியாக பேராசிரியர்-1, உதவி பேராசிரியர்-2, முதுநிலை பட்ட மருந்தியல் மாணவர்கள்-10, ஆய்வக நுட்புநர்கள்-3 ஆகியோரை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் கை சுத்திகரிப்பான் சுயமாக தயார் செய்யப்பட்டு 200 எம்.எல் கொண்ட சுமார் 30,000 பாட்டில்கள் நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ சாரா பணியாளர்கள் மற்றும் இதர அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் இத்தொற்று நோய் பாதிக்கப்பட்டு உள்நோயளிகளாக சிகிச்சை அளிக்கும் பொருட்டு இதுவரை 116 நபர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நாளது தேதி வரை தொற்று நோயில் இருந்து பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட நோயாளிகளின் எண்ணிக்கை 73 ஆகும். மேலும் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பிற நோய்கள் இருந்த காரணத்தினால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆகும்.

அரசு ஆணையின்படி விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இம்மருத்துவமனையில், உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கும் பொருட்டு இதுவரை 34 நபர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். இவர்களில், இதுவரை வரை பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆகும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.