சிறப்பு செய்திகள்

மருத்துவ சிகிச்சை அளிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆய்வு மேற்கொண்டு பேசியதாவது:-

அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தங்கள் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இன்னும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதையெல்லாம் அரசு தீர பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.இன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சில ஆலோசனைகளை நாங்கள் வழங்கி இருக்கின்றோம். அதையும் பின்பற்றி இந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணியிலே நீங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

வேளாண்மைத் தொழிலை பொறுத்தவரைக்கும், ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டு, அந்தப் பணிகள் அனைத்தும் சிறப்பான முறையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு எந்தவித தடையும் இல்லாமல் இன்றைக்கு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள். தாங்கள் விளைவித்த விளைபொருட்களை உரிய முறையிலே விற்க அரசு ஏற்பாடு செய்திருக்கின்றது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் துணை நின்று அந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்ற அளவிற்கு அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதேபோல, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளை சந்தைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு வேளாண் துறை அதிகாரிகளுக்கு இந்த நேரத்திலே பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசினுடைய ஆலோசனையின்படி அத்தியாவசியப் பொருட்கள் உரிய நேரத்திலே அனைத்து மாவட்டங்களிலும் தங்குதடையில்லாமல் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் எந்த இடத்திலும் மக்களுக்கு உணவு பிரச்சனை இல்லை என்ற நிலையையும் நாம் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றோம்.

மருத்துவ சிகிச்சை அளிப்பதிலே இந்தியாவிலேயே நாம் முதன்மையாக விளங்கி கொண்டிருக்கின்றோம். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, நோய் அறிகுறி தென்பட்ட உடனேயே அவர்களாக மருத்துவமனையிலே சேர்ந்து சிகிச்சை பெற்றால் பூரண குணமடைந்து விடுகிறார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்தவர்கள் மூலமாகத் தான் இந்த நோய் தொற்று பரவல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பரவலை தடுப்பதற்கு அரசு எடுத்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.

இன்றைக்கு படிப்படியாக மருத்துவமனையிலே சேர்க்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றார்கள். இருந்தாலும் இன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலர் குறிப்பிட்டது என்னவென்றால், தங்கள் மாவட்டத்தில் எந்த வைரஸ் பரவலும் இல்லை. அதே வேளையிலே தங்கள் மாவட்டத்திலிருந்து வாழ்வாதார பிரச்சனை காரணமாக வேறு மாவட்டத்திற்கு சென்று தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். அப்படி பணிபுரிகின்றபோது அவர்களுக்கு தொற்று ஏற்பட்டு அவர்கள் சொந்த மாவட்டத்திற்கு திரும்புகின்ற போது தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது என்பதாகும்.

ஆகவே, நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி இன்னும் பல மாவட்டங்களிலிருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் தொழில் செய்வதற்காகவும், தொழிலாளர்களாக பணிபுரிவதற்காகவும் சென்னைக்கு வருகின்றார்கள். அவர்கள் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினாலே சொந்த மாவட்டங்களுக்கு திரும்பிய காரணத்தினாலே, அங்கே அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட போது, பரிசோதனையில் பெரும்பாலானவர்களுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.

அதனால் நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும், மற்ற மாவட்டங்களிலும் இந்த தொற்று ஏற்பட்டிருக்கின்ற செய்தியை நாம் அறிந்திருக்கின்றோம். அவர்கள் எல்லாம் குணமடைய செய்வதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மூன்று நான்கு நாட்களில் சென்னையிலிருந்து தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு சென்ற அனைவருக்குமே பரிசோதனை செய்யப்பட்டு அதன்மூலமாக அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைய செய்வோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.