தமிழகம்

ஊரடங்கு பிறப்பித்ததிலிருந்து இன்றுவரை மக்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது – முதலமைச்சர் பேச்சு

சென்னை

ஊரடங்கு பிறப்பித்ததிலிருந்து இன்றுவரை எவ்வித சிரமமும் இல்லாமல் மக்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வினை தொடங்கி வைத்து பேசியதாவது.

இன்றைக்கு அரசு மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகின்றது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கின்றன. மளிகை சாமான்களாக இருந்தாலும் சரி, காய்கறிகளாக இருந்தாலும் சரி, இன்றைக்கு மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால், வெளிமாநிலத்தில் இருக்கின்ற மளிகை பொருட்கள் நம்முடைய மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து, தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, காய்கறிகளை பொறுத்தவரைக்கும், விவசாயிகளிடத்திலேயே நம்முடைய அதிகாரிகள் சென்று, அரசே அதை விலைக்கு வாங்கி, சென்னை மற்றும் மாநிலத்திலுள்ள பிற பகுதிகளுக்கும், வீதிவீதியாக நடமாடும் காய்கறி வண்டிகள் மூலமாக எடுத்துச் சென்று அவர்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கே காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு எந்தந்த வகையிலே அரசு உதவி செய்ய முடியுமோ, அந்த வகையில் அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், அனைத்து துறை அதிகாரிகளும் இதற்கு துணை நின்றார்கள். அப்படி துணைநின்ற காரணத்தினால் தான் ஊரடங்கு பிறப்பித்ததிலிருந்து இன்றுவரை மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப் பெற்றன. ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து ரேஷன் கடைகளிலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்குமே தலா 1000 ரூபாய் ரேஷன் கடை மூலமாக வழங்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு விலையில்லாமல் வழங்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் முழுவதும் கொடுத்தோம். அதை தொடர்ந்து மே மாதத்திற்கும், இப்பொழுது விநியோகம் செய்து கொண்டிருக்கின்றோம். ஆகவே, ஐந்து பேர் ஒரு குடும்பத்தில் இருந்தால் ஏப்ரல் மாதம் 25 கிலோ அரிசி பெற்றிருந்தால், அந்த ஐந்து பேர் குடும்பத்தில் இருக்கின்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதம் 50 கிலோ அரிசி நாங்கள் வழங்குகின்றோம்.

அதுமட்டுமல்லாமல் விலையில்லா சர்க்கரை, பருப்பு மற்றும் எண்ணெய் 1 கிலோ கொடுக்கின்றோம். அதேபோல் தொடர்ந்து ஜூன் மாதமும் ஐந்து பேர் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதம் வழங்கப்பட்டதைப் போல பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்கின்றோம். குறிப்பிட்ட தேதியிலே, குறிப்பிட்ட நேரத்திற்கு ரேஷன் கடைகளுக்கு சென்றால் உங்களுடைய பொருட்கள் தங்குதடையின்றி பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் பலமணி நேரம் ரேஷன் கடைகளில் நிற்க வேண்டிய அவசியம் கிடையாது. அதையும் எளிதாக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.