தற்போதைய செய்திகள்

புதிதாக தொடங்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி

திருப்பத்தூர்

புதிதாக தொடங்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட மாவட்ட ஊராட்சி நிதியில் 18 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.49 லட்சம் மதிப்புடைய 33 மின்கலம் மூலம் இயங்கும் இ கார்ட் தள்ளுவண்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பயன்பாட்டிற்காக வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஆட்சிப்புரிந்து வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் நல்லாட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. ஊரக வளர்ச்சித்துறையில் மத்திய, மாநில அரசுகள் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊரக வளர்ச்சி துறையின் சிறப்பான செயல்பாட்டால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மத்திய அரசின் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.

பொதுமக்கள் குடியிருப்புகளில் உள்ள குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் அவற்றை குடியிருப்புகளிலிருந்து சுகாதார தூய்மை காவலர்கள் கொண்டு பெறப்பட்ட மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து சுற்றுப்புறத்தை காக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதனடிப்படையில் ஊரக பகுதிகளிலும் திடக்கழிவு மக்கும் மக்காத குப்பைகளை பெற ஏற்கெனவே பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தற்போது பேட்டரி மூலம் மூன்று சக்கர வண்டியில் குப்பைகளை குடியிருப்புகளில் இருந்து பெற்று அவற்றை தரம்பிரித்து மறுசுழற்சி செய்திட இந்த வண்டிகள் தற்போது வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 445 வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 33 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு வீட்டில் சேரும் திடக்கழிவுகளை தெருக்களில் கொட்டாமல் விழிப்புணர்வுடன் தங்கள் வீடுகளை தேடி குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வழங்கி சுற்றுப்புறத்தை பாதுகாக்க வேண்டும்.

மேலும் புதியதாக தொடங்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை வளாச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். தற்போது மழை பொழிவு மிகவும் குறைவாகவே கிடைக்கபெற்றுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க நடைமுறையில் உள்ள மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தை விடுபட்டுள்ள அனைத்து கிராம பகுதிகளுக்கும் கொண்டு செல்ல இந்த நிதியாண்டில் நிதியை பெற்று செயல்படுத்திட முதல்வரிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கும் அரசாக தமிழக அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.