மதுரை

முதலமைச்சரின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ரேஷன் ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டும் – ஜெ.ராஜா வேண்டுகோள்

மதுரை

முதலமைச்சரின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட பாண்டியன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஜெ.ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை மாவட்டத்தில் பாண்டிய கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையை சேர்ந்த சுமார் 135 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரண தொகுப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜெ.ராஜா புதூர் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்து ஊழியர்களிடம் கூறியதாவது:-

இந்த தடை காலத்திலும் மக்களுக்கு வேண்டிய நிவாரண தொகுப்புகளை நியாய விலைக்கடைகள் மூலம் முதலமைச்சர் வழங்கி வருகிறார். இந்த பணியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.

மேலும் முதலமைச்சர் சில அறிவுரை வழங்கியுள்ளார். அதில் குறிப்பாக நீங்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் முக கவசம் அணிய நீங்கள் சொல்ல வேண்டும். அதேபோல் சமூக இடைவெளியை மக்களிடத்தில் நீங்கள் கடைபிடிக்குமாறு கூற வேண்டும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிருமிநாசினியை உங்கள் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை நீங்கள் வழங்கும்போது எடையளவு குறையாமல் சரியாக வழங்க வேண்டும் அதேபோல் மக்களிடம் நீங்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது இயக்குநர் ஜெயசீலன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அபுதாகீர் உட்பட பலர் உடனிருந்தனர்.