சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

நோயை கட்டுபடுத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- மருத்துவ நிபுணர் குழு வேண்டுகோள்

சென்னை

நோயை கட்டுபடுத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று நிபுணர் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர் சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்த ஆலோசனைக்கு பின்னர் சென்னை மாநகராட்சியின் முன்னாள் சுகாதார அதிகாரி டாக்டர் குகானந்தம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துக்களை முதல்வர், துணை முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் அதிகாரிகளும் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக கனிவோடு கேட்டார்கள். முதல்வர், இந்த நிபுணர் குழு எடுத்துரைக்கும் நிபுணத்துவத்தின் படி தான் இந்த அரசு நிறைய காரியங்களை செய்து கொண்டிருக்கிறது என்று சொன்னது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.

நாங்கள் என்ன சொன்னோம் என்றால், தமிழ்நாடு அரசின் செயல்பாடும், அதேபோல மருத்துவர்கள், பொது சுகாதாரத் துறையினரின் செயல்பாடுகள் கடந்த மூன்றரை மாதங்களாக மிகவும் நன்றாக நடந்த காரணத்தினால், மக்கள் மத்தியில் பாதிப்புக்கள் அதிகமாக இல்லை. பாஸிடிவ் இருப்பது கண்டு பிடித்தாலும் இறப்புகள் மிகவும் குறைவாக இருக்கிறது. தற்பொழுது வேறு மாநிலங்கள், வேறு மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து தமிழர்கள் புலம்பெயர்ந்து வருகின்றார்கள். அவர்களையெல்லாம் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டுமென்பது மிக அவசியமான ஒரு விஷயம். அதை மக்கள் புரிந்து கொண்டு அரசாங்கத்திற்கு உதவி செய்ய வேண்டும்.

மற்றொன்று, நோய்த் தொற்றுடன் கூடிய மற்ற தொற்றாத நோய்களான சர்க்கரை வியாதி, இரத்தநாள நோய்கள், இருதய நோய்கள், ரத்த அழுத்தம், எச்ஐவி மற்றும் நீண்ட நாள் நோய்களுக்கான மருந்துகள் சாப்பிடுவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால், வயதானவர்களுக்கும், இதுபோன்ற நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் சிகிச்சையெடுப்பது, அவர்களைத் தனிமைப்படுத்து மிக முக்கியம் என்பதை நாங்கள் தெரிவித்தபொழுது, முதல்வர் அதற்காக உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அவர்களுக்கு சரியான மருந்துகளைக் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும், அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்பது குறித்தும் மிக விரிவாகத் தெரிவித்தார்கள். மக்கள் மத்தியில் அதிகமாக பாஸிடிவ் வருவது குறித்து வருத்தப்பட வேண்டாம்.

சென்னை மாநகரத்தில் அதிகமான பாஸிடிவ் கேஸ் வருவது குறித்து கவலைப்படத் தேவையில்லை. நிறைய பாஸிடிவ் கேஸ் கண்டுபிடிக்கும்பொழுது நாம் நோயின் தாக்கத்தை மிக விரைவாக மிதிக்கப் போகின்றோம், அதனால் தான் சென்னையில் முடுக்கிவிடப்பட்ட நிறைய பணிகளை செய்து கொண்டிருக்கின்றோம்.

அதேபோல், ஊரடங்கு இருந்தாலும், மக்கள் மத்தியில் நிறைய விழிப்புணர்ச்சிகள் தேவை. சென்னையில் வியாபார மையங்களுக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளுக்குச் செல்லும்பொழுதும் கூட்டமாகக் கூடாமல் இருக்க வேண்டும் என்பதை கற்றறிந்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டுமென்பது மிக முக்கியமான விஷயம்.

முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், கூட்டமாகக் கூடாமல் இருத்தல் போன்றவற்றை பின்பற்றினால் நன்றாக இருக்கும். மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்கு அரசாங்கம் அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் இருக்கின்றது என்பதையும் முதல்வர் உறுதியிட்டுச் சொன்னார்.

நாங்கள் தெரிவித்த பரிந்துரைகளை முதல்வர் பரிசீலித்து அதற்கான உத்தரவுகளை வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். இதுவரை, நிபுணர் குழு தெரிவித்தவற்றை அரசாங்கம் கேட்டு செயல்படுத்தி வருவதினால் நமக்கு இந்தப் பிரச்சினைகள் மிகவும் குறையும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல்வருடன் எங்களுடைய நிபுணர் குழுவின் கலந்துரையாடல் மிகவும் உபயோகமாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல், லாக்டவுன் பற்றி டாக்டர் பிரதீபா சொன்னார். லாக்டவுன் தொடர்ந்தால் தான் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும் என்பதால் அப்படி செய்கிறோமேயொழிய மற்றபடி இன்றைக்கே நீங்கள் தளர்வுகளை பார்த்திருக்கிறீர்கள். மக்கள் பலரும் வேலைக்கு செல்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் திறக்கவில்லை, பஸ்கள் விடவில்லை, மார்க்கெட் திறக்கப்படவில்லை, அழகு நிலையங்கள் திறக்க நாம் அனுமதிக்கவில்லை. மற்றவையெல்லாம் திறந்து விட்டிருக்கிறோம்.

அரசாங்கத்தினுடைய இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை எடுப்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு கிட் கொடுக்கிறார்கள், அந்த கிட்டில் கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், பழம், முட்டைகள், வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மாஸ்க், சானிடைசர் ஆகியவைகளை ஏற்கனவே கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சென்னையில் நிறைய குடிசைப் பகுதிகளில் இப்பொழுது கூட கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது.

மே, ஜுன் ஆகிய மூன்று மாதங்களிலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற அனைத்து பொருட்களையும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல அம்மா உணவகத்தில் ஒரு நாளைக்கு 10 லட்சம் நபர்களுக்கு மேல் சாப்பாடு கொடுக்கப்படுகிறது. நோய் தடுப்பு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, மக்கள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு  தெரிவித்தார்.