சிறப்பு செய்திகள்

சட்டத்தின் அனைத்து பயன்களும் ஏழை மக்களை சென்றடையும் இலக்கை அடைய அம்மாவின் அரசு முழு ஒத்துழைப்பு நல்கும்…

சென்னை

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கேரள மாநில ஆளுநர் சதாசிவம், உச்சநீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே முதலியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:- 

அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு மிக்க இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். தகுதியான தலைவர்களுக்கு சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது. அதற்காக அவர்களை நான் வாழ்த்தி வரவேற்கிறேன். நமது மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் தனது ஆரம்ப கால வாழ்க்கையை ஒரு வழக்கறிஞராகத் தான் தொடங்கினார்.

டெல்லி பார் கவுன்சில் உறுப்பினரான அவர் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக சேவையாற்றினார். குடியரசு தலைவர் ஆவதற்கு முன்னர் அவர் பீகார் ஆளுநராக இருந்து மக்கள் பணியாற்றினார். ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காக இன்று தன்னை அர்ப்பணித்துக்கு கொண்டு நாட்டின் தலைமை குடிமகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கேரள ஆளுநர் சதாசிவம் ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து பணியாற்றியவர். நமது மண்ணின் மைந்தர். அவருடைய கடுமையான உழைப்புக்கும், சேவைக்கும் இன்று அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. பல்வேறு குறிப்பிடத்தக்க வழக்குகளில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். அது மட்டுமல்லாது மனித கழிவுகளை மனிதனே சுமக்கும் அவலத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்ற தீர்ப்பினை வழங்கிய பெருமை அவருக்கு சாரும்.

உச்சநீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் பாட்டே ஒரு வழக்கறிஞர் குடும்பத்தை சேர்ந்தவர். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார்கார்டு அவசியம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியவர். சென்ைன உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி தனது வழக்கறிஞர் பணியை மகாராஷ்டிரா மாநிலத்தில் 1982-ம் ஆண்டு தொடங்கி இன்று பல்வேறு வழக்குகளில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். அத்தகைய ஒரு பெண்மணி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வீற்றிருப்பது பெருமைக்குரியது.

“நீதிக்கு முன் அனைவரும் சமம்” என்ற கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் மாநிலம் தமிழ்நாடாகும். நீதி கேட்ட பசுவிற்காக, அதன் கன்றை கொன்ற தனது மகனை தேர்க் காலில் இட்டு கொன்ற மனுநீதிச் சோழன், நீதி தவறியதற்காக தனது உயிரை விட்ட பாண்டிய மன்னன், புறாவிற்காக தனது தொடையிலிருந்து சதையை அறுத்துக் கொடுத்த சிபி சக்கரவர்த்தி போன்ற நீதிக்கு தலை வணங்கும் எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த நாடு தமிழ்நாடு.

இந்திய அரசியலமைப்பின்படி, நீதித் துறை, ஆட்சித் துறை, சட்டமன்றம் மற்றும் பத்திரிகைத் துறை ஆகிய நான்கு தூண்கள் தங்கள் எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும். தமிழ்நாட்டில் இந்த நான்கு பிரிவுகளும் சுதந்திரமாக செயல்படுகின்றன என்பதை நான் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெற்காசிய நாடுகளில், சட்டக் கல்விக்கென தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம், நமது டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். ஆசியாவிலேயே மிகக் குறைவான கல்விக் கட்டணத்தில் தரமான சட்டக் கல்வியை வழங்கி வருகிறது. இந்த பல்கலைக் கழகத்திற்கென தனியாக சென்னையிலுள்ள பெருங்குடியில் 62 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வளாகம் அமைக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சட்டக்கல்வி மேம்பாட்டிற்கு புரட்சித்தலைவி அம்மாவும், புரட்சித்தலைவி அம்மாவின் அரசும் எடுத்த நடவடிக்கைகள் ஒரு சிலவற்றை இங்கே கூற விரும்புகிறேன்.திருச்சிராப்பள்ளியில் தேசிய சட்டப் பள்ளி துவக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் குறைந்த செலவில் சட்டக் கல்வியை வழங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 13 சட்டக் கல்லூரிகளில், 11 சட்டக் கல்லூரிகள் அரசு சட்டக் கல்லூரிகளாகும்.கடந்த ஆண்டு மட்டும், புதிதாக 3 அரசு சட்ட கல்லூரிகளை நாங்கள் துவக்கினோம். இந்த ஆண்டு, மேலும் 3 புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படவுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்கள் கட்டுதல், நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிக்காக கடந்த 8 ஆண்டுகளில் 998 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.நாட்டிலுள்ள சட்ட பல்கலைக்கழகங்களில் முதன் முறையாக மிகப்பெரிய அளவில் ஏஐஆர் (AIR) இணைய வழி சட்டத் தொகுப்பகம் மற்றும் சட்டச்செயலி பகிர்வகம், நமது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் ஒவ்வொரு அரசு சட்டக் கல்லூரிக்கும், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த உரிய நிதி, அரசால் வழங்கப்பட்டு வருகிறது.“சட்டத்தின் அனைத்து பயன்களும் ஏழை மக்களை சென்றடையும்படி பார்த்துக் கொள்ளும் கூட்டுப் பொறுப்பு அனைவருக்கும் உண்டு” என்றார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

எனவே நீதியரசர்களும், நீதிமன்றங்களும் இந்த இலக்கை அடைய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அதற்கு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கும் என்றும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று Doctor of Laws பட்டம் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த இனிய விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்த குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத்ேகாவிந்த், கேரள ஆளுநர் சதாசிவம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோதே ஆகியோருக்கு டாக்டர் ஆப் லா பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.