சிறப்பு செய்திகள்

அனைத்து வாகனங்களுக்கான வரியை அபராதமின்றி செலுத்த காலக்கெடு நீட்டிப்பு – முதலமைச்சர் உத்தரவு

சென்னை

அனைத்து வாகனங்களுக்கான ஆண்டுவரி, காலாண்டு வரி உள்ளிட்ட அனைத்து வரியையும் அபராதமின்றி செலுத்துவதற்கு காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

கொரோனா வைரஸ் கோவிட்-19 நோய் பரவலைத் தடுக்க இந்திய அரசு மற்றும் மாநில அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக, பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் மோட்டார் வாகன சட்டம் 1974ன் படி செலுத்த வேண்டிய ஆண்டு வரி காலக்கெடுவான 10.04.2020 மற்றும் காலாண்டு வரி காலக்கெடுவான 15.05.2020 வரியினை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஆண்டு வரி மற்றும் காலாண்டுக்கான அனைத்து வகை வாகனங்களுக்கான வரியினை அபராதமின்றி செலுத்த 30.06.2020 வரை கால நீட்டிப்பு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.