தற்போதைய செய்திகள்

விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.82 லட்சம் கடனுதவி – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்

கன்னியாகுமரி:-

தாழக்குடியில் நடைபெற்ற விழாவில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.82 லட்சம் கடனுதவிகளை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா, விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.82 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், பி.நாகரெத்தினம் வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.82 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

கூட்டுறவு சங்க சட்டமானது, மிகக்கடுமையான சட்டம். எனவே, சங்க உறுப்பினர்கள், அலுவலர்கள் யாராக இருந்தாலும், தவறுகள் நேராத வண்ணம் மிகக் கவனமாக செயலாற்ற வேண்டும். தவறுகள் நடக்கும் பட்சத்தில் கடுமையான சட்டத்திற்கு ஆட்பட்டு, மீளமுடியாத துயரத்தையும், இன்னல்களையும் அனுபவிக்க நேரிடும். தாழக்குடி கூட்டுறவு கடன் சங்கமானது மகளிர்சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவில் கடனுதவிகள் வழங்கி வருகிறது. பொதுமக்களும், கூட்டுறவு சங்க உறுப்பினர்களும் இச்சங்கத்திற்கு அதிக வைப்பு நிதிகளை செலுத்தி, அதிக கடனுதவிகளை அளித்து விவசாயிகளுக்கு உதவுவதோடு, இச்சங்கத்திற்கு லாபத்தை ஈட்டவும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் உதவி வழங்குவதில் மாநிலத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலாவதாக இருக்கிறது. அடுத்த ஆண்டு நமது மாவட்டம் மாநிலத்திலேயே முதல் மாவட்டமாக திகழ வேண்டும். எனவே, கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கி, அனைவரும் இணைந்து செயல்பட்டால், இந்த இலக்கை நாம் அடையலாம்.

இச்சங்கத்தின் மூலம் அதிக முதலீடுகளை ஈட்டி, பொதுமக்களுக்கும், சுய உதவி குழுக்களுக்கும் அதிக கடன்களை வழங்கி, அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். குறிப்பாக, சுய உதவி குழுக்கள்தான் கடன்களை காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிப்பார்கள். எனவே, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சி என்பதற்கிணங்க இச்சங்கம் மென்மேலும் வளரவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

விழாவில் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிமேலாண்மை இயக்குநர், சுப்பையா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (நாகர்கோவில் சரகம்) பா.சங்கரன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் என்.பிரம்மநாயகம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் லதா, ராமச்சந்திரன், பாக்கியலட்சுமி, அணி செயலாளர்கள் சுந்தரம், சுந்தர்நாத், சுகுமாறன், பூங்கா கண்ணன், நாகர்கோவில் வட்ட கழக செயலாளர்கள் வேலாயுதம், ஸ்ரீமணிகண்டன், கடன் சங்க அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் இ.என்.சங்கர் நன்றி கூறினார்.