சிறப்பு செய்திகள்

கொரோனா தொற்றில்லா மாவட்டமாக கோவை மாறியுள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

கோவை

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்ததால் தான் கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கொரோனோ தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காக்கும் வகையில் பல்வேறு சிறப்பு முயற்சிகளை எடுத்து, மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் கொரோனாவால் எந்தவொரு பாதிப்பும் வராமல் இருப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சர் அறிவுரை வழங்கி வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவத் துவங்கி சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருந்தது.

அதனையடுத்து முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளாலும், கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் கொரோனா இல்லா மாவட்டமாக உருவாவதற்கு இரவு, பகல் பாராது ஓயாது உழைத்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், மாநகர காவல் ஆணையாளர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர், மாநகராட்சி ஆணையாளர், இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அவருடன் இணைந்து பணியாற்றிய அனைத்துத் துறை அலுவலர்களுக்கும், அரசுக்கு பெரிதும் உதவியாக இருந்த செய்தித்துறையினர், அனைத்து பொதுமக்கள் என அனைவருக்கும் என் இதயப்பூர்வமான பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது கோயம்புத்தூர் மாவட்டமானது, கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக விளங்கி வருவதுடன், கடந்த இரண்டு வாரங்களாக புதிய தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை என்பதும் மகிழ்ச்சியான செய்தியாகும். இந்நிலையினைப் பெற கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசின் பெருமுயற்சிகளுக்கு துணை நின்று வரும் தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகளுக்கும், முழு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித்துறையில் மட்டும் மொத்தம் 10,698 பணியாளர்கள், மக்கள் நல்வாழ்துறையின் மூலம் 2,000த்திற்கும் மேற்பட்ட சுகாதாரப்பணியாளர்களின் அர்ப்பணிப்பான பணிகளின் மூலமும், பொதுமக்களின் ஒத்துழைப்பின் மூலமும் கோயம்புத்தூர் மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக விளங்குகின்றது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக மருத்துவமனையாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மாற்றியமைக்கப்பட்டது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000- நிவாரணத் தொகையுடன், அரிசி, சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்களை விலையில்லாமல் பொதுவிநியோக திட்ட கடைகள் மூலம் வீடுதேடி சென்று வழங்கிட முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 9.76 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000-வீதம் ரூ.96 கோடியே, 66 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதுடன், மற்றும் 98 கோடி 31 லட்சம் மதிப்பீட்டில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றது.

அதுபோலவே, தொழிலாளர் நலத்துறை மூலம் 55,875 அமைப்பு சாரா தொழிலாளர், 39,353 கட்டுமானத் தொழிலாளர்கள், 4,277 ஆட்டோ ஓட்டுனர்கள், 15,000 சாலையோர வியாபாரிகள் என மொத்தம் 1 லட்சத்து 14ஆயிரத்து 505 நபர்களுக்கு தலா ரூ.2000 வீதம் நிதியுதவித் தொகையாக ரூ.22 கோடியே 9 லட்சம் நிவாரணத்தொகை மற்றும் ரூ.3.50 கோடி மதிப்பில் நிவாரணப்பொருட்களும், வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான், அதுவும் கோயம்புத்தூர் மாவட்டத்தில்தான், மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு மலிவு விலையில் முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் 8.4.2020 முதல் உணவு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுமார் 5 லட்சம் நபர்கள் உணவு உண்டு பயனடைந்துள்ளனர். இதற்கான செலவினம் ரூ.43 லட்சம் கோவை புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் விலையில்லாமல் வழங்கப்படும்.

நல்லறம் அறக்கட்டளையின் 300 தன்னார்வலர்கள் மூலம் 8 பகுதிகளில் சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டு 26.03.2020 முதல் தேவைகளின் அடிப்படையில் மலைகிராமங்கள் முதல் கோயம்புத்தூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டதன் மூலம் இதுவரை சுமார் 27 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள், சாலையில் வசிப்போர்கள் என 75,000 நபர்கள் கண்டறியப்பட்டு தினந்தோறும் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பணிகளை தீவிரமாக மேற்கொள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 கோடி பங்களிப்பு நிதியினை உடனடியாக பயன்படுத்திக் கொள்ள கடந்த மார்ச் மாதம் 28ம்தேதியன்றே மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கப்பட்டது.

மாநகர் முழுவதிலும் பணியாற்றும் 400 தூய்மைப் பணியாளர்களுக்கு 2,000 முழுபாதுகாப்பு கவசங்கள் ரூ.20 லட்சம் மதிப்பிலும், 7,000 முகக்கவசங்கள், ரப்பர் கையுறைகள், கிருமிநாசினி ரூ.22.79 லட்சம் மதிப்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு தேவைகளின் அடிப்படையில் மாவட்டம் முழுவதிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 40 மலைவாழ் கிராமங்களில், 7,000 குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு அவர்களின் பகுதிகளுக்கே நேரடியாக சென்று விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 8 லட்சம் குடும்பங்களுக்கு 11 அத்தியவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் முன்னின்று பணியாற்றி வரும் களப்பணி யாளர்களான 7,500 மாநகராட்சி துப்புரவு மற்றும் சுகாதாரப்பணியாளர்கள், 2,300 பேரூராட்சி பணியாளர்களுக்கும, 850 நகராட்சி பணியாளர்கள், 2450 ஊராட்சி பணியாளர்களுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பணியாற்றி வரும் 1,350 சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்களுக்கும், இரவு பகல் பாராது உழைத்து வரும் 5,000 காவலர்களுக்கும் என மொத்தம் 19,450 பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அதிநவீன ஜெட்ராடிங் வாகனங்கள் மூலமும், அதிநவீன வாகனங்கள் மூலமும், தூய்மை களப்பணியாளர்கள் மூலமும், ஆட்கள் செல்லமுடியாத பகுதிகளில் நவீன பறக்கும் இயந்திரங்கள் மூலமும் தினந்தோறும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. தொடர்ந்து, இதுபோன்ற தீவிர விழிப்புணர்வு களப்பணிகளால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 146 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தொடர் சிறப்பான சிகிச்சையினால் 145பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். (ஒருவர் சென்னை மருத்துவமனையில் ஏற்கனவே உடல் நலக்குறைவாக இருந்த நிலையில் இறந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை என்ற மகிழ்ச்சியளிக்க கூடிய நிலை தொடர்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு இயற்கை பேரிடர்களை திறமையுடன் கையாண்டு மக்களை எவ்வித பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கும் அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பிற்காகவும் மற்றும் நிவாரண பணிகளுக்காகவும் தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், சிறுவர், சிறுமியர், மாணாக்கர்கள் பல்வேறு தரப்பினரும் கொரோனா வைரஸ் தொற்று நிவாரணப்பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியதில் இதுவரையில் 254 நபர்கள் மூலம் 15 கோடியை 56 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவின் தாக்கம் பற்றி பொதுமக்கள் பயப்படாமல் அனைத்து நிலைகளிலும் விழிப்புணர்வோடு எதிர்வரும் காலங்களில் வாழக் கற்றுக் கொள்வோம். முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் சமூக இடைவெளியை இனிவரும் காலங்களிலும், குறிப்பாக பணியாற்றும் இடங்களிலும், பொது இடங்களிலும் அவசியம் கடைபிடிப்பதை உறுதி செய்வோம்.

கொரோனா வைரஸ் தொற்று தீர்வுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை குடித்திட பழகுவோம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட நாம், வரும் நாட்களில் அதைமுழுமையாக ஒழிப்பதற்கு பாடுபடுவோம், அரசு இதற்காக எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு கொடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) காளிதாசு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.