தமிழகம்

கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் ஊரடங்கில் வாகனத்தை நிறுத்தி சென்றவர்கள் ஒரு நாள் கட்டணத்தை செலுத்தினால் போதும்

சென்னை

கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் ஊரடங்கின் போது வாகனத்தை நிறுத்தி சென்றவர்கள் ஒரு நாள் கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சி.எம்.டி.ஏ.அறிவித்துள்ளது.

இதுகுறித்து சி.எம்.டி.ஏ.வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

கொரோனா பாதிப்பால் அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையொட்டி கோயம்பேடு டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பேருந்து நிலையம் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு சென்றுள்ளனர். இங்கு சுமார் 145 நான்கு சக்கர வாகனங்களும், 1359 இரு சக்கர வாகனங்களும் விட்டுச் செல்லப்பட்டுள்ளது.

தற்போது வாகனங்களை திரும்ப எடுக்க செல்கின்ற பொதுமக்களிடம் இந்த வாகனங்களுக்கு 55 நாட்களுக்கும் முழுநேர வாடகை கட்டணம் வசூலிப்பதாக கவனத்திற்கு வந்ததையொட்டி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவுறுத்தலின் படி இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருப்பினும், அவற்றிற்கு “ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு கடிதம் மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

எனவே, பொதுமக்கள் ஒருநாளுக்குரிய கட்டணமாக, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 40 ரூபாயும், மற்றும் மிதிவண்டிகளுக்கு 15 ரூபாய், மட்டும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.