சிறப்பு செய்திகள்

பெரியகுளத்தில் 8500 பேருக்கு நிவாரண உதவி – துணை முதலமைச்சர் வழங்கினார்

தேனி

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள நலிந்த முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர்கள் உள்பட 8500 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் பணி மகத்தானது. அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் 4636 நபர்களுக்கு தலா ஆயிரம் வீதம் 46 லட்சத்து 36 ஆயிரம் தேனி மாவட்ட கழகம் சார்பில் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுகாதார துறையினரிடம் , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 லட்சம் முக கவசங்களை வழங்கினார்.

மேலும் ஊரடங்கால் சிரமப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் தங்களது சொந்த செலவில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நலிந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள் என 8500 நபர்கள் உள்ளனர். இவர்களில் 2200 நபர்களுக்கு முதற்கட்டமாக நிவாரண உதவி வழங்கப்பட்ட நிலையில் நேற்று மீதமுள்ள 6300 நபர்களுக்கு பெரியகுளத்தில் உள்ள தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியையும் கடைபிடித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை, மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் மாவட்ட பொருளாளர் சோலைராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.