தற்போதைய செய்திகள்

வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள்

விழுப்புரம்:-

வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று தண்ணீரை திறந்து விட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் வீடூர் நீர்த்தேக்க திட்டம், வராகநதி மற்றும் தொண்டியாறு ஒன்றுசேரும் இடத்தில் 1958-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1959-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வராகநதி மற்றும் தொண்டியாறு முறையே செஞ்சி வட்டம், பாக்கம் மலைத்தொடரிலிருந்தும், தொண்டூர் ஏரியிலிருந்தும் உற்பத்தியாகி வீடூர் அணையில் ஒன்று சேர்ந்த பிறகு, அணையிலிருந்து சங்கராபரணி நதியாக புதுச்சேரியின் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இவ்விரு நதிகளும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீரோட்டம் பெறுகிறது.

வீடூர் அணையின் மொத்த நீளம் 4500 மீட்டர், உயரம் 32 அடி மற்றும் கொள்ளளவு 605 மில்லியன் கன அடி. வீடூர் அணையின் பிரதான கால்வாயின் நீளம் 17.640 கி.மீ. மற்றும் 5 கிளை கால்வாய்கள் மூலம் தமிழ்நாட்டில் 2200 ஏக்கர் மற்றும் புதுவை மாநிலத்தில் 1000 ஏக்கர் என மொத்தம் 3200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

வீடூர் அணையிலிருந்து ஒருபோக பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் இருக்கும் தருவாயில் டிசம்பர் 30.12.2019 முதல் மே 12.05.2020 வரை 135 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வீடூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது தமிழக பகுதியான சிறுவை, பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரக்கேனி, ஐவேலி, நெமிலி, ஏறையூர், தொள்ளமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள 3200 ஏக்கர் விசவசாய நிலங்களும் மற்றும் புதுச்சேரி பகுதியில் 1000 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வானூர் எம்.சக்ரபாணி, திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர் எஸ்.அனு, பொதுப்பணித்துறை அலுவலர் ஜவகர், மயிலம் ஒன்றிய செயலாளர் சேகரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.