சிறப்பு செய்திகள்

மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, மே 18-

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைப்பற்றி அறிந்தவுடன், தமிழ்நாடு அரசு, ஜனவரி 2020 முதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஜனவரி முதல் மார்ச் 2020க்குள் 146 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியமான மருந்துகளும், 21 லட்சம் பாதுகாப்பு கவச உடைகளும், 1.45 கோடி முகக்கவசங்களும் மற்றும் 24 லட்சம் என் 95 முகக்கவசங்களும் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், இதனை உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த நோயை பரவாமல் தடுக்க தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939, தொற்று நோய் சட்டம் 1897ன் கீழ் அறிவிக்கை வெளியிட்டது.

மத்திய அரசு, இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும், மத்திய அரசு இந்த ஊரடங்கினை 17.5.2020 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்ததை பின்பற்றி தமிழ்நாடு அரசும் இதை நடைமுறைப்படுத்தியது.

அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவல் அதிகம் இல்லாமலும், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

கடந்த 13.5.2020 அன்று எனது தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 33 சதவீதம் பணியாளர்கள் அளவை 50 சதவீதம் வரை உயர்த்தியும், சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித் தொழிற்சாலைகள், விசைத்தறி உட்பட) 50 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு இயங்கவும், சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் 50 சதவீத தொழிலாளர்களை கொண்டு இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக, 13.5.2020 அன்று நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும்; மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 14.5.2020 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும்,

மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுகளின் அடிப்படையிலும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இவ்வாறு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.