தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக் இல்லாத, தூய்மையான மாநகராட்சியாக மதுரையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்…

மதுரை:-

மதுரையை பிளாஸ்டிக் இல்லாத, தூய்மையான மாநகராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகராட்சி பெத்தானியாபுரம் வ.உ.சி. தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து வீடுகள் தோறும் வாங்குவதற்காக புதிய இலகு ரக திடக்கழிவு வாகனத்தை ஆணையாளர் ச.விசாகன், தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

மதுரை மாநகராட்சி தூய்மையான மாநகராக மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மதுரை மாநகரை தூய்மையான மாநகராக மாற்றுவதற்கு மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்காக புதிய இலகு ரக வாகன ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுத்து ஒவ்வொரு வீடு வீடாக குப்பைகளை கொண்டு வந்து தங்கள் பகுதிக்கு வரும் குப்பை வண்டியில் வீடுகளில் உள்ள குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்து கொடுப்பதற்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகரை தூய்மையான மாநகராக மாற்றுவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மதுரை மாநகர் மிக தொன்மையான நகரம், வரலாற்று சிறப்பு மிக்க நகரம், உலகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற மதுரை மாநகரில் பிளாஸ்டிக் இல்லா மாநகராகவும், தூய்மையான மாநகராகவும் மாற்றுவதற்கு மதுரை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து, நம்முடைய அடுத்த சந்ததிகள் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வதற்கும் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை எளிதாக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 41 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் மற்றும் 41 உரம் தயாரிக்கும் மையம் கட்டுமானப் பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் வார்டுப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் திடக்கழிவுகளை வீடுகள் தோறும் சேகரிப்பு செய்வதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இலகுரக திடக்கழிவு வாகனங்கள் ஒரு வாகனத்திற்கு ரூ.5.60 லட்சம் வீதம் 99 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.554.40 லட்சம் மதிப்பீட்டில் வாங்குவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, வேலை உத்தரவு வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் ச.விசாகன், நகர பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத் ராஜா, உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிப் பொறியாளர்கள் (வாகனம்) அமர்தீப், சாலமன், உதவிப்பொறியாளர் பாபு, சுகாதார அலுவலர் விஜயகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.