கன்னியாகுமரி

புத்தன்துறையில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை – டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தகவல்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், புத்தன்துறையில் கடலரிப்பால் ஏற்பட்டுள்ள, பாதிப்பு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று அப்பகுதியில், ரூ.35 லட்சம் செலவில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- 

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், புத்தன்துறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் கேசவன்புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட புத்தன்துறை பகுதியில், கடலரிப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் வீடுகள் பாதிப்படையும் சூழ்நிலையில் உள்ளது.

இதுகுறித்து ஊர் பங்குத்தந்தை காட்பிரி, ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைவர் சேவியர் மனோகரன் வாயிலாக, எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். 16.05.2020 இரவு வருவாய்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு, கடலரிப்பு ஏற்பட்ட பகுதிக்கு சென்று, அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அதனைத்தொடர்ந்து, 17.05.2020 அன்று காலை, பொதுப்பணித்துறை (கடலரிப்பு தடுப்பு கோட்டம்) செயற்பொறியாளர் வசந்தியிடம் கடலரிப்பு ஏற்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டு, அப்பகுதியில் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, உடனடியாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன்.

மேலும், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைவர் சேவியர் மனோகரன், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.அய்யப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மேரி தமிழரசி, ஊராட்சிமன்ற தலைவர் கெபின்சாள், ஆகியோர், கடலரிப்பு ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று, பார்வையிட்டார்கள்.

ஆய்வின் போது, கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் அருட்தந்தை ஆ.ஸ்டீபன், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.வீராசாமி, ஊராட்சி செயலாளர் தாமஸ், வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.

பொதுப்பணித்துறை அலுவலர்கள் கடலரிப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்புசுவர் அமைக்க, ரூ.35 லட்சத்தில் திட்டமதிப்பீடு தயார் செய்து, சென்னை, பொதுப்பணித்துறைக்கு அனுப்பியுள்ளார்கள். அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, கேசவன்புத்தன்துறையில் ஏற்கனவே 2011-ம் ஆண்டில், அப்பகுதி மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.25 கோடி செலவில் கடலரிப்பு தடுப்புசுவர் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் கவனத்திற்கு, அப்பகுதியில் தற்போது கடலரிப்பால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை எடுத்து சென்று, மீனவ மக்களின் நலன்கருதி, உடனடியாக ரூ.35 லட்சம் செலவில் தடுப்புசுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவ மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அம்மா அவர்களின் தலைமையிலான தமிழக அரசு, மீனவ மக்களுக்கு எப்போதும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.