திருப்பூர்

மக்களை காக்க உதவாமல் அரசை குறை கூறுவதா? ஸ்டாலினுக்கு, துணைசபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கண்டனம்

திருப்பூர்

மக்களை காக்கும் நடவடிக்கைக்கு உதவாமல் அரசை குறை கூறி அரசியல் செய்வதா என்று ஸ்டாலினுக்கு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்ேகயம் ஒன்றியத்திற்குட்பட்ட சாம்பவலசு, பழைய கோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, காளிவலசு, நத்தக்காட்டுவலசு, கீரனூர், பாலசமுத்திரம் புதூர், சிவகிரி புதூர், படியூர், சிவன்மலை ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வசிக்கும் 20 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் ஏற்பாட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி வகைகள் மளிகை பொருட்கள் முக கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான, பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கழகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரணம் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த வேளையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டத்தில் வாழும் மக்களை நேரிடையாக சந்தித்து உணவிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறோம். இந்த கொரோனா வைரஸ் கிருமி மக்களை இம்மி அளவிலும் நெருங்கிவிட கூடாதென்பதில் கழக அரசு விழிப்புடன் செயல்படுகிறது.

இந்த நேரத்தில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் நாங்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று காய்கறிகள் மற்றும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கி வருகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது தெரியவில்லை, ஆனால் இந்த கொரோனா வைரஸை நமது மாநிலத்தில் பரவ விடாமல் தடுத்து மக்களை காக்க அரசுக்கு எதிர்க்கட்சிகள் கரம் கொடுத்து உதவாமல் அரசை குறைகூறி வருகின்றனர். எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒன்றிணைவோம் என்று ஒரு அமைப்பை அறிவித்து விட்டு மக்கள் ஏதாவது தேவைக்கு போன் செய்தல் அந்த போனை எடுக்க யாரும் இல்லை. எந்த உதவியும் அவர்களிடம் இருந்து மக்களுக்கு வந்து சேரவில்லை என்பது வெளிப்படையான உண்மை இந்த வீண் அரசியல் களேபரம் ஸ்டாலினாலும், திமுக.வினராலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார்.