ராமநாதபுரம்

எத்தனை நோய்கள் புதிதாக வந்தாலும் மக்களை காக்கும் சஞ்சீவி மூலிகையாக கழகம் இருக்கும் – எம்.ஏ.முனியசாமி பேச்சு

ராமநாதபுரம்:-

எத்தனை நோய்கள் புதிதாக வந்தாலும் தமிழக மக்களை காக்கும் சஞ்சீவி மூலிகையாக கழகம் இருக்கும் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண உதவியாக காய்கறிகள் மற்றும் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக சென்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி வழங்கினார். ஆதரவற்ற முதியோர்களுக்கு நிதியுதவிகளையும் கூடுதல் நிவாரணங்களையும் எம்.ஏ.முனியசாமி வழங்கினார்.

பின்னர் கடலாடியில் செய்தியாளர்களிடம் எம்.ஏ.முனியசாமி கூறியதாவது:-

நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் நமது தமிழகத்தில் இந்த வைரசை விரட்ட நமது முதல்வர் போராடி வருகிறார். இந்த தொற்று நோயை விரட்ட பல போராட்டங்களை நிகழ்த்தி வருகிறார். மாவட்டம் வாரியாக மக்களை தொடர் கண்காணிப்பில் பார்வையிடுகிறார். மனித குலத்துக்கே இந்த வைரஸ் தொற்று புதிய சவாலாக இருப்பதால் ஒவ்வொரு விடியலையும் கவனமாக கையாள்கிறார். வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வைரஸ் தொற்று நமக்கு கற்றுக்கொடுத்த பாடம் என்னவென்றால் நம்மை நாமே சுத்தப்படுத்திக் கொள்ளவும், பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் உணர்த்தியுள்ளது. கைகளை மணிக்கு ஒருமுறை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், சமூக இடைவெளியினை நாம் தொடர்ந்து கடைபிடிக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். தாயுள்ளத்தோடு சேவை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் நித்தமும் நன்றி சொல்ல வேண்டும்.

இவர்களை ஊக்கப்படுத்தினால் நமது நாடு பசுமையாக மாறும். மக்களுக்காக உழைக்கும் நமது முதல்வருக்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். எத்தனை நோய்கள் புதிதாக வந்தாலும் தமிழக மக்களை காக்கும் சஞ்சீவி மூலிகையாக கழகம் இருக்கும்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார்.