சிறப்பு செய்திகள்

பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.50 க்கு வெங்காயம் விற்பனை – தமிழக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை

சென்னையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 1 கிலோ வெங்காயம் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

வட மாநிலத்தில் மழை வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், நாடு முழுவதும் வெங்காயம் வரத்து குறைந்து இருக்கிறது. இதனால் அதன் விலை உயர்ந்து வருகிறது. சமையலுக்கு பயன்படும் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் முதல் வாரம் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது. மாத கடைசியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தொட்டது. தொடர்ந்து வெங்காயத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. டிசம்பர் மாத
தொடக்கத்தில் ரூ.150க்கும் கடந்த வாரத்தில் ரூ.200க்கும் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயமும் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. வெங்காய தட்டுப்பாடு காரணமாக உயர்ந்துள்ள வெங்காய விலையை கட்டுப்படுத்த, ஏற்றுமதிக்கு தடை வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாடு என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.170 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ முதல்தர வெங்காயம் தற்போது ரூ.40 வரை குறைந்து ரூ.130 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை குறைந்து ரூ.160 ஆகவும் உள்ளது. அத்துடன், வெங்காயத்தின் தரத்தை கொண்டு ரூ.100க்கு குறைவாகவும் ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அம்மாவின் உன்னதத் திட்டமான பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 3 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் உட்பட 79 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிசந்தையில் விற்கப்படும் காய்கறிகள் விலையை விட குறைவாக இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்திட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, வெளிச்சந்தையில் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட போதிலும், பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஏற்கனவே வாங்கப்படும் கொள்ளளவை காட்டிலும் வெங்காயம் அதிகமாக விற்பனைக்காக வைக்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட சில மணி நேரத்திலேயே வெங்காயமும் விற்று தீர்ந்துவிட்டது. மத்திய தொகுப்பில் இருந்து 500 டன் வெங்காயம் கேட்டு உள்ளோம். அது 2 நாளில் வந்துவிடும். அது வந்தவுடன் 6 ஆயிரம் ரேஷன்
கடைகள் கூட்டுறவு கடைகளில் வெங்காயம் விற்கப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.நேற்று பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. ஒருவருக்கு 5 கிலோ வரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்களை விலை உயர்வு பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மயிலாப்பூரில் நகரும் பண்ணைப்
பசுமை நுகர்வோர் கடை மூலமும் ரூ.50க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. அதிக அளவில் பொதுமக்கள் வந்து வாங்கி சென்றனர். அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.