தற்போதைய செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மின்தடை குறை தீர்க்கும் மையம் – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மின்பகிர்மான வட்டத்தில் மின்தடை குறை தீர்க்கும் பதிவு மையத்தை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மின் நுகர்வோர் தடை தொடர்பான குறைகளை உடனுக்குடன் சரி செய்யும் பொருட்டு 24 மணி நேரமும் இயங்கும் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை குறைதீர்க்கும் பதிவு மையம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி மின்பகிர்மான வட்டத்தில் மின் நுகர்வோரின் மின்தடை குறித்த குறைகளை உடனுக்குடன் சரிசெய்ய கணினி மயமாக்கப்பட்ட மின்தடை குறை தீர்க்கும் பதிவு மையம் அமைக்க ரூ.18.19 லட்சம் செலவில் இத்திட்ட ஒப்புதல் பெறப்பட்டு கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் மின்தடை குறைதீர்க்கும் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக இம்மாவட்டத்தில் உள்ள 6,03,730 மின் நுகர்வோர்கள் பயன்பெறுவர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய மின் தடை குறித்த புகார்களை “1912” அல்லது “18004256433” என்ற இலவச அழைப்பு தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களது மின்தடை குறித்த புகார்களை பதிவு செய்தால் மின்தடை நிவர்த்தி செய்யப்படும். இந்த மின்தடை குறை தீர்க்கும் பதிவு மையத்தை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.குமரகுரு (உளுந்தூர்பேட்டை), பிரபு (கள்ளக்குறிச்சி), முன்னாள் அமைச்சர் ப.மோகன், தமிழ்நாடு சர்க்கரை ஆலை இணையம் தலைவர் ராஜசேகர், நகர செயலாளர் பாபு, கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், கள்ளக்குறிச்சி மாவட்டம் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அருட்பெருஞ்சோதி, செயற்பொறியாளர் (பொது) முருகேசன், கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் ரகோத்தமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகுவேல்பாபு, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அரசு, அய்யப்பன, அருணகிரி, பழனிசாமி, ஆப்பிள், ரவி, பழனி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.