மதுரை

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி தயாநிதிமாறன் எம்.பி மீது நடவடிக்கை – மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார்

மதுரை

தயாநிதிமாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த அனுப்பானடி எஸ்.பாலகுமார், மதுரை மாநகர் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:-

நான் மதுரை மாநகரில் கழக உறுப்பினராக பணியாற்றி வருகிறேன். 13.5.2020 தேதியன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்பொழுது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பத்திரிகையாளர்களிடம் மக்கள் நல பிரதிநிதி நாங்கள். எங்களை தலைமைச் செயலாளர் மூன்றாம் தர மக்களாக அதாவது, வாயில் சொல்ல முடியாத உங்கள மாதிரி ஆட்கள், தாழ்த்தப்பட்ட ஆட்களா, தாழ்த்தப்பட்ட ஆட்களா என்று மிகவும் ஆவேசமாக ஒரு குறிப்பிட்ட மக்களை ஜாதியின் பெயரை சொல்லி இழிவாக பொது இடத்தில் பேசி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக மக்களின் ஈடுகட்ட முடியாத மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதிபதி பதவி திமுக போட்ட பிச்சை என பேசி, ஆதிதிராவிடர் சமூக மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பையும் வேதனையும் ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சமூகநீதிப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தந்தை பெரியார் சாதிக்கு எதிராக சாதியை ஒழிப்பை முன்னெடுத்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அரசியல் நடத்தினார். அவரை பின்பற்றி திமுக தற்போது சாதி கட்சி போல் கட்டுப்பாடற்று சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு சரத்து 17ன் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாக சொல்கிறது. மேலும் சரத்து 15ன் படி மதம், இனம், பால் குறிப்பிடும் ஆகியவற்றை காரணம் கொண்டு பாகுபாடு காட்டக்கூடாது என்று அடிப்படை உரிமைகள் கூறுகிறது.மேலும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை சாதி பெயர் சொல்லி இழிவாக பொது இடத்தில் பேசுவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை ஆகும்.

எனவே மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு சாதி வன்மத்தோடு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசியுள்ள தயாநிதி மாறன், மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகளின் படி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அனுப்பானடி எஸ்.பாலகுமார் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.