சிறப்பு செய்திகள்

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மே 31 வரை இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 407 அம்மா உணவகங்களில் நாளை (இன்று) முதல் ஊரடங்கு முடியும் காலம் வரை விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் உத்தரவின்படி ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இன்று முதல் ஊரடங்கு காலம் வரை விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் குடிநீர் குறித்தும், நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் மற்றும் திட்டப்பணிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.

ஒரு காலத்தில் உலகையே அச்சுறுத்திய போலியோ நோயை ஒழிக்க அனைவருக்கும் ஒரே நேரத்தில் சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவிலேயே போலியோ இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முன்னோடியாக விளங்கியது. அதேபோல இப்பொழுது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றையும் விரட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பொதுமக்களுக்கு முக கவசம் அணிதல், அடிக்கடி சுத்தமாக கைகளை கழுவுதல், அனைத்து இடங்களிலும் 2 மீட்டர் இடைவெளியுடன் ஒருவருக்கு ஒருவர் தள்ளி நிற்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை செயல்படுத்த வேண்டும். உயிர்காக்கும் இந்த உன்னத பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றினால் வைரஸ் தொற்றை முழுவதுமாக ஒழித்துவிடலாம். எனவே அனைவரும் முழுமூச்சுடன் செயல்பட்டு இந்த நோயை விரட்டவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்தும், ஊடரங்கு காலத்தில் முதலமைச்சர் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், 2020-21 வரவு, செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, சாலை திட்டப்பணிகள் மற்றும் குளங்கள் பராமரிப்பு குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் சென்னையில் குடிசைவாழ் பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்க உத்தரவிட்டார். தற்பொழுது வரை 8 லட்சம் நபர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள், சீர்மிகு நகரத் திட்டப்பணிகள், அம்ரூத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தெருவிளக்கு மற்றும் பாதாள சாக்கடைத்திட்டம் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், அப்பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகள், பசுமை வீடு திட்டப்பணிகள், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டப்பணிகள், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டு திட்டப்பணிகள், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டப்பணிகள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வங்கி கடன் இணைப்பு 2020-21ல் 14,000 கோடி வழங்கும் செயல் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் சிறப்பு கடனுதவி (Covid-19 SHG Special Loan), கொரோனாவிற்காக சில வங்கிகள் வழங்கிய சிறப்பு கடனுதவியினை முறையாக சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள், அனைத்து சுயஉதவிக் குழுக்களுக்கும் புத்தாக்கப் பயிற்சி மற்றும் புத்தக பராமரிப்பு, இளைஞர்கள் சுய தொழில் தொடங்கிட வங்கிகளில் கடனுதவி, அனைத்து துறை வாயிலாக தொழில் முனைவோர் திட்டங்களை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டு திட்ட இலக்கை 28.02.2021க்குள்ளும், 2019-20 முடிய நிலுவையில் உள்ள இலக்கு முழுவதையும் 31.12.2020க்குள்ளும் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் முத்ரா திட்டத்தில் கடன் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்ட அனைத்து சுயஉதவிக் குழுக்களுக்கும் சுழல் நிதி ரூ.10,000 மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு சுழல் நிதியாக ரூ.50,000 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்திலும் இந்தியாவிலேயே அதிகப்பட்சமாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் 82 லட்சம் முகக்கவசங்களை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட மின்மதி செயலியின் மூலம் பொதுமக்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. தற்பொழுது இந்தச் செயலியை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 லட்சம் நபர்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மேலும், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் குடிநீர் நிலவரம் குறித்தும், பல்வேறு புதிய குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், கூட்டு குடிநீர் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிலை குறித்தும் அமைச்சர் கேட்டறிந்து குடிநீர் தட்டுபாடின்றி நாள்தோறும் குடிநீர் வழங்க முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் செயல்படுத்த அலுவலர்கள் திட்டம் வகுத்து விரைவாகவும், துரிதமாகவும் முடித்திட வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சர் பல்வேறு தளர்வுகளை வழங்கி, அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்பொழுது சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி அனைவரும் பணிபுரிவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.