சிறப்பு செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத் உத்தரவிட்டுள்ளதோடு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஊரக உள்ளாட்சி, நகர்புற உள்ளாட்சி என இரண்டாக பிரித்து நடத்த முடிவு செய்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தலை அறிவித்தது. தமிழகத்தில் கடந்த 1996, 2001, 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளுக்கு சேர்த்தே நடத்தப்பட்டது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தனித்தனியாக நடத்துவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. ஊராட்சி உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. அதே நேரம் பஞ்சாயத்து வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நகர்புற அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி அதன் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட்டாலும் முடிவுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுகிறது. எனவே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளையும் ஒரே நாளில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதன் மூலம் வழக்கம் போல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.