தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்றலிருந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்களை பாதுகாக்க நடவடிக்கை -அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை

சென்னை, மே 22-
கொரோனா தொற்றிலிருந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 11 சிறப்பு குழுக்களுடன் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தொற்றிலிருந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்களை பாதுகாக்க அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருத்துவ சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன மருத்துவர்களை கொண்டு 11 வகையான சிறப்பு மருத்துவ குழுக்களை உருவாக்கியது.

அதன்படி டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கான குழு, நீரிழிவு நோயாளிகளுக்கான குழு, இரத்த கொதிப்பு நோயாளிகளுக்கான குழு, புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கான குழு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான குழு, குழந்தைகள் மற்றும் இரத்த உறைதல் நோயாளிகளுக்கான குழு, இருதய நோயாளிகளுக்கான குழு, மூத்த குடிமக்களுக்கான குழு, காசநோய், ஆஸ்துமா, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு, மனநலம் காப்பதற்கான குழு ஆகிய 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவக்குழுக்களுடன் நேரடியாகவும், மின்னணு ெசயலி மூலமாகவும் கலந்தாலோசனை கூட்டம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு சிறப்பு பிரிவினருக்கும் எந்தெந்த மாதிரியான மருத்துவ வசதி செய்து தர வேண்டுமெனவும், வீட்டிலிருக்கும் போது பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்தும், பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் குறித்தும், நோய் ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிந்து அதற்குரிய ஆலோசனைகளை எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்தும், அரசின் டெலிகன்சல்டேஷன் மற்றும் ஆரோக்ய சேது செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து எவ்வாறு இச்சேவைகளை அவர்களுக்கு கொண்டு செல்வது என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இக்குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறப்பு கவனம் தேவைப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளவும், அவர்களிடம் உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்ச டாக்டர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.