தற்போதைய செய்திகள்

அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கடலூரில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது – அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

கடலூர்

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறைந்து வருகிறது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.

கடலூர் மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு பணி அலுவலர் முனைவர் இல.சுப்பிரமணியன், கூடுதல் காவல் துறை இயக்குனர் வினித்வாங்கடே, விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சந்தோஷ்குமார், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

முதலமைச்சர் ஆணைக்கிணங்க 144 தடை உத்தரவு தொடங்கிய நாள் முதல் இன்று வரை அனைத்து அரசுப் தூய்மை பணிகள், கிருமிநாசினி தெளித்தல்,உணவு வழங்குதல் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படைத் தேவைகளான காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவை வழங்க சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவத் துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் முழு அர்ப்பணிப்போடு நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை பூரணமாக குணமடைய செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களுக்கு முழுவீச்சில் சிகிச்சை மற்றும் சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம், வட்டம், கிராம அளவில் அக்குழுக்கள் நோய் பரவாமல் தடுக்க திறம்பட செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருகிறது

வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் அனைத்து விவசாயிகளின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு அதிகமாக விளைந்த காய்கறிகள்,பழங்கள், தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உடனுக்குடன் விற்பனை செய்வதற்கு ஏற்ப அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்து வருகின்றனர். காய்கறிகள் பொது மக்களின் வீடுகளுக்கு சென்றடைய கூட்டுறவுத் துறை மற்றும் நகராட்சிகள் சிறப்பாக செயல்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட வழங்கல் துறை மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000, விலையில்லா பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அம்மா உணவகத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இனிவரும் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் சமுதாய இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வருவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தங்களையும் தங்களின் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தங்களின் வருங்கால சந்ததியினரின் நலன் கருதி நோய் தொற்று வராமல் காக்க தமிழக அரசின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு தருவதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இக்கூட்டத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்ரா, சார் ஆட்சியர்கள் சிதம்பரம் விசுமஹாஜன், விருத்தாசலம் பிரவீன்குமார், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மருத்துவத்துறை இணை இயக்குனர் மருத்துவர் ரமேஷ் பாபு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.