சிறப்பு செய்திகள்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள அம்மாவின் இல்லம் நினைவு இல்லம் – அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்தார்

சென்னை

புரட்சித்தலைவி அம்மாவின் போயஸ் தோட்ட வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக்கவும், ‘புரட்சித்தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ அமைக்கவும் அவசர சட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவுக்கு சொந்தமான, சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, தமிழக மக்களுக்கு அவர் செய்த சாதனைகள்யும், தியாகங்களையும் தெரிந்து கொள்ள பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என, 17.8.2017 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, அந்த இல்லத்தை கையகப்படுத்த தமிழ் வளர்ச்சித்துறை 5.10.2017 அன்று நிர்வாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அந்த நிலம் மற்றும் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க அறிவிப்பு 28.6.2019 அன்று வெளியிடப்பட்டது. இதன்பின், 6.5.2020 அன்று இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது.

வேதா நிலையம் இல்லத்தில் உள்ள மரச்சாமான்கள், புத்தகங்கள், நகைகள் உள்ளிட்டவை கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே, கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடையும் வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை அதன் பராமரிப்புக்காக அரசுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்த இல்லம் மற்றும் அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசுடைமையாக்கவும், ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ‘புரட்சித்தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ அமைக்கவும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்.

இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வரும், துணை முதல்வர், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார்கள். இந்த அறக்கட்டளை வேதா நிலையம் இல்லத்தைப் பராமரிக்கவும், அங்குள்ள அனைத்து அசையும் சொத்துகளையும் பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இவ்வாறு அந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.