தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலடி…

மதுரை

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலடி கொடுத்தார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. முதலமைச்சர் முன்கூட்டியே போர்க்கால நடவடிக்கை எடுத்து 155 இடங்களில் நிவாரண மையங்களை அமைத்து அதில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் உள்ளிட்டோர் இரவு பகல் பாராது தங்கள் உயிரை பணயம் வைத்து செய்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மக்கள் உயிர் பலியாகாமல் காக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கனமழையில் வீடு இடிந்து 5பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். தற்போது மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்கிட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ஆனால் இது எல்லாம் தெரிந்தும் ஸ்டாலின், அம்மா அரசு செய்து வருவதை மூடி மறைக்கும் விதமாக நீலகிரியில் எதுவும் நடக்கவில்லை என்று குற்றச்சாட்டை எங்கள் மீது வைத்து வருகிறார். மக்களுக்கு நாங்கள் செய்யும் பணிகள் அனைத்தும் நன்றாக தெரியும். கனமழையால் உயிரிழந்தோர்களுக்கு ரூபாய் 4 லட்சம் தான் நிதியுதவி வழங்கப்படும். ஆனால் இன்றைக்கு ரூ.10 லட்சம் நிதியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது நமது அண்டை மாநிலமான கேரளாவை எடுத்துக் கொண்டால் இது போன்ற மீட்பு பணிகள் முழுமை பெறவில்லை. அண்டை மாநிலம் கூட நாம் செய்யும் பேரிடர் பணியினை பின்பற்றி வருகின்றனர். ஆகவே ஸ்டாலின் யாரோ எழுதித் தரும் அறிக்கைகளை ஊடகங்களில் சொல்லி வருகிறார். இந்த பொய் குற்றச்சாட்டை மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் கஜா, ஓகி, தானே போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களில் தமிழக அரசு எவ்வாறு சிறப்பாக செயல்பட்டது என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.