தற்போதைய செய்திகள்

திருவாரூரில் 103 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்….

திருவாரூர்:-

திருவாரூரில் 103 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழலகத்தை அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்.

பின்னர் மாப்பிள்ளைக்குப்பம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட நன்னிலம் வட்டத்தில் 47 பயனாளிகளுக்கும், குடவாசல் வட்டத்தைச் சேர்ந்த 46 பயனாளிகளுக்கும் , வலங்கைமான் வட்டத்தைச் சேர்ந்த 10 பயனாளிகள் என ஆக மொத்தம் 103 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாக்களையும் மேலும் ,

குடவாசல் வட்டம் திருக்குடி ஊராட்சி மணப்பறவை கிராமத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 3 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்வதற்கு பணி ஆணைகளையும் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட முதல்வர் திருவாரூர் வருகை தந்த போது கஜா புயலினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என தெரிவித்தார். அதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் இருக்கின்ற சாதாரண சாமானிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் 103 இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

17 ஆயிரம் பட்டாக்கள் வழங்குவதற்கு ஏதுவாக தயார் நிலையில் உள்ளது. மேலும் 30 ஆயிரம் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டாக்களையும் வழங்கி, வீடுகளையும் கட்டித் தருகின்ற அரசாக அம்மாவின் அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அரசு சாதாரண மக்களின் வேண்டுகோளை ஏற்று அம்மா அவர்களின் கனவுகளை நனவாக்குகின்ற வகையில் தொடர்ந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன் காரணமாக மக்களுக்கு பிடித்த ஆட்சியாகவும், மக்களுக்கான ஆட்சியாகவும் முதல்வர் தலைமையில் விளங்கிக் கொண்டிருக்கிறது

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ப.குற்றாலிங்கம் ,கோட்டாட்சியர் முருகதாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.முருகேசன் நன்னிலம் வட்டாட்சியர் திருமால், குடவாசல் வட்டாட்சியர் ஜீவானந்தம், வலங்கைமான் வட்டாட்சியர் இன்னாசிராஜ், குடவால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், நன்னிலம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் அன்பு, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் சம்பத், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம.குணசேகரன், மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.