தற்போதைய செய்திகள்

உழவனாய் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடியார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்…

சேலம்:-

உழவனாய் பிறந்து இன்று தனது உழைப்பால் முதல்வர் எடப்பாடியார் உயர்ந்துள்ளார் என தமிழக முதல்வரின் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு திட்ட முகாம் திறப்பு விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை மக்களின் துயரங்களை தீர்க்க அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திட ஏதுவாக புதியதாக மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் முதன்முதலாக அந்த திட்டத்தை எடப்பாடி தொகுதியில் முதல்வர் நேற்று துவக்கினார். பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் முதன் முதலில் மனுக்களை பெற்றுக்கொண்டார் . பின்னர் வனவாசி பகுதியில் அரசு பள்ளியில் விழா நடந்தது. இந்த விழாவில் தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை , தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உழவனாய் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடியார். மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மக்களிடம் ஆட்சியர்,வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மனுக்களை பெற்று நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் புரட்சி திலைவி அம்மா அவர்கள் அம்மா திட்ட முகாம் என்ற திட்டத்தினையும் செயல்படுத்தினார். தற்போது அண்ணன் எடப்பாடியார் அதிகாரிகளை மக்களை தேடி சென்று மனுக்களை வாங்கும் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மழை காலங்களில் ரிக்சா வண்டி ஒட்டுபவர்கள் மழையில் நனைந்தபடி வண்டி ஓட்டுவார்கள். உள்ளே இருப்பவர்கள் நனையாமல் இருப்பார்கள். அந்த நிலையை பார்த்த அவர் உடனடியாக அவர்களுக்கு மழை காலங்களில் மழை கோட்டு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.

அதே போல் மதுரை,சேலம்,தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்தாலே போதும் கள்ளி பால் ஊற்றி கொலை செய்யும் நிலை இருந்தது. புரட்சித்தலைவி அம்மா இதையறிந்து தொட்டில் குழந்தை என்னும் அற்புதமான திட்டத்தை கொண்டுவந்தார். இன்று பெண் சிசு கொலை தடுத்து நிறுத்தப்பட்டது.

அதை போல்தான் முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த திட்டமும் ஆகும். இத்திட்டம் மூலம் முதியோர் உதவி தொகை, பட்டா வழங்குதல், பொதுவாக பல ஆண்டுகள் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பார்கள். அவர்களுக்கு பட்டா இருக்காது. மேலும் நீர் நிலை புறம்போக்குகளில் இருப்பவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்க கூடாது என்றிருப்பதால் அவர்களுக்கு எல்லாம் தனியார் நிலத்தை கூட வாங்கி பட்டா வழங்கி வீடு கட்டி தரவும், பட்டா இருந்தும் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது மிகவும் அற்புதமான திட்டமாகும். எடப்பாடியார் ஆட்சிக்கு வந்ததும். இவர் அம்மா மாதிரி செயல்படுவாரா என்று கேட்டவர்கள் இன்று அவர் அம்மா வழியில் சிறப்பாக செயல்படுவதாக சொல்கிறார்கள்.

சேலம் மாவட்டம் மட்டுமே அறிந்திருந்த எடப்பாடியை இன்று தமிழகம், இந்தியா எங்கிலும் தெரிந்திட செய்துள்ளார். விரைவில் உலகெங்கும் இந்த எடப்பாடி தெரிய போகிறது. ஆம் தொழில் முதலீட்டை ஈர்க்க முதல்வர் லண்டன், மற்றும் அமெரிக்க செல்கிறார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் செல்கின்றனர். நிச்சயம் அதிலும் அவர் வெற்றி வாகை சூடுவார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன்,சட்டமன்ற உறுப்பினர்கள் மேட்டூர் செம்மலை, சேலம் மேற்கு ஜி.வெங்கடாஜலம், சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல், ஓமலூர் வெற்றிவேல், சங்ககிரி ராஜா ,சேலம் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் இளங்கோவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.