தற்போதைய செய்திகள்

நீர் மேலாண்மை பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை – அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள்…

திருவாரூர்:-

நீர் மேலாண்மை பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை என்று அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் சொரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பெரியகுளத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்மேலாண்மை இயக்கப்பணிகளில் ஒன்றாக குளம் தூர்வாரும் பணியினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். புரட்சிதலைவி அம்மா நீர் சேமிப்புக்கான வழிமுறைகளான மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு உருவாக்குதல் போன்றவற்றை கொண்டு வந்து, உலகே வியக்கும் வண்ணம் செயல்படுத்தியவர். அந்தவகையில் முதலமைச்சர் இந்தாண்டு ரூ.500 கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டத்தினை தீட்டி மாநிலம் முழுவதும் செயல்படுத்தினார்.

இத்திட்டமானது தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 1942 குளங்கள் தூர்வார திட்டமிடப்பட்டு இன்றையதினம் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்தூர்வாரும் திட்டத்தின் கீழ் தலா ஒரு குளத்திற்கு ரூ.1 லட்சம் மண் எடுப்பதற்கும், ரூ.2 லட்சம் கரைகள் சீரமைப்பு பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மழைநீரை சேமிப்பது ஒவ்வொருக்கும் தலையாய கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நீர் சேமிப்பு நாளைய சந்ததியினருக்கு நாம் செய்யும் நன்மை. ஆகவே தமிழக அரசு மேற்கொள்ளும் நீர் மேலாண்மை பணிகளுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால், செயற்பொறியாளர் குமார், நன்னிலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் இராமகுணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.