மற்றவை

தமிழகம் முழுவதும் ரூ. 122.62 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் மண்டலம், கத்திவாக்கத்தில் 86 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மேலும், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 36 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

இது குறித்த அரசு செய்திகுறிப்பு வருமாறு:-

சென்னைப் பெருநகர் பகுதியின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கேற்ப பாதுகாப்பான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று சேவைகளை அளித்திடும் வகையில், தற்போதுள்ள உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், தற்கால மற்றும் எதிர்காலத் தேவைக்கேற்ப உட்கட்டமைப்புகளை திட்டமிட்டு உருவாக்குதல், இயக்குதல் மற்றும் தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற பணிகளை சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலமாக புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் மண்டலம், கத்திவாக்கத்தில் 86 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 24 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாள் ஒன்றுக்கு சுமார் 12,000 முதல் 13,000 யூனிட் வரை மின் உற்பத்தி செய்யும் வகையிலும், ஆண்டிற்கு சுமார் 3 கோடி ரூபாய் மின் கட்டண சேமிப்பு ஏற்படும் வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டடங்களான அம்மா மாளிகை, மண்டல அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட 662 பெருநகர சென்னை மாநகராட்சி கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள 3.064 மெகா வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின் உற்பத்தி தகடுகள்;

சென்னை, சைதாப்பேட்டையில் சலவையாளர்களுக்கு மூன்றாம் கட்டமாக 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓய்வறைகள், சலவை அறைகள், தேய்ப்பறைகள் மற்றும் உலர்த்தும் அறைகள்.சென்னை – போரூர், சக்தி நகர் பிரதான சாலை மற்றும் நெற்குன்றம், பெருமாள் கோயில் தெரு ஆகிய இடங்களில் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையக் கட்டடங்கள்.சென்னை – இராமாபுரம், பஜனை கோயில் தெருவில் 1 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையம் மற்றும் வார்டு அலுவலகக் கட்டடம்.

சென்னை, பெருங்குடி, அண்ணா நெடுஞ்சாலை பகுதியில் 2 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 5000 சதுர மீட்டர் பரப்பளவில், நடைபாதை, சிறுவர் விளையாட்டுத்திடல், திறந்தநிலை உடற்பயிற்சி உபகரணங்கள், இரண்டு பூப்பந்து விளையாட்டு தளங்கள், தண்ணீர் வசதி, மின்வசதி, பசுமை புல்தரை மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பூங்கா;மேலும், நகராட்சி நிர்வாகம் சார்பில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில், கழனிவாசல் வாரச்சந்தை அருகில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் நாளங்காடி.

பேரூராட்சிகள் இயக்குநரகம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவ மனையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பார்வையாளர்கள் தங்கும் விடுதிக் கட்டடம். இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் பேரூராட்சியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலகக் கட்டடம், ஈரோடு மாவட்டம், சிவகிரி பேரூராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம்.

என மொத்தம் 122 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க. சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் டாக்டர் டி.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிசாமி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கும் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.என்.ஹரிஹரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.