சிறப்பு செய்திகள்

குடிசையில் வசிக்கும் அனைவருக்கும் 2023-ம் ஆண்டிற்குள் புதிய வீடு – துணை முதலமைச்சர் அறிவிப்பு…

தேனி:-

குடிசையில் வசிக்கும் அனைவருக்கும் 2023-ம் ஆண்டிற்குள் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க(மகளிர் திட்டம்)த்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 702 மகளிருக்கு ரூ.175.00 லட்சம் மதிப்பிலான மானியத்தொகையினையும், நகர்புற மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 37 குழுக்களுக்கு ரூ.3.70 லட்சம் மதிப்பிலான சுழல் நிதியினையும், 5 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கூட்டமைப்பிற்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான நிதியினையும் என மொத்தம் 744 பயனாளிகளுக்கு ரூ.181.700 லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 177 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களையும் நேற்று வழங்கினார்.

விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் தமிழக அரசு தமிழக மக்கள் வாழ்விற்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நீண்ட காலத்திற்கு பயன்தரும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களின் பயன் நேரடியாக பொதுமக்களை சென்றடையும் வண்ணம் திறம்பட செயல்படுத்தி வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தரம் வாய்ந்த கல்வியினை ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் பொருட்டு மாநிலத்தின் மொத்த வருவாயில் நான்கில் ஒரு பகுதி நிதியினை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்து எண்ணற்ற கல்வி சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி சிறப்பாகவும் செம்மையாகவும் செயல்படுத்தினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து கல்விக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து வந்தார்கள். தற்போது படிப்படியாக உயர்ந்து பள்ளி கல்வித்துறைக்கு 33 ஆயிரம் கோடி ரூபாயும், உயர் கல்வித்துறைக்கு 4 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவிகளின் கல்வி ஏழ்மையின் காரணமாக எந்த ஒரு சூழ்நிலையிலும் தடைபடக் கூடாது என்பதற்காக கல்வி ஊக்கத்தொகை, விலையில்லா பாட புத்தகம், நோட்டுப்புத்தகம், வருடத்திற்கு நான்கு ஜோடி சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, வடிவியல் பெட்டிகள், வரைபட புத்தகங்கள், கிரையான்ஸ், கணித உபகரணங்கள், பேருந்து பயணஅட்டை, விலையில்லா மிதி வண்டிகள், மாணவ, மாணவியர்கள் உலகளவிய கல்வி பெறுவதற்காக ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா மடிக்கணிகள் போன்ற 16 வகையான கல்வி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழக அரசு பெண் கல்வி ஊக்கப்படுத்திடவும், ஏழ்மையின் காரணமாக பெண்களின் திருமணம் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காவும் தமிழக அரசு ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும், 8 கிராம் திருமாங்கல்யத்திற்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் 8 கிராம் திருமாங்கல்யத்திற்கு தங்கமும் வழங்கி வருகிறது.

கருவுற்ற காலங்களில் ஏற்படுகின்ற வருவாய் இழப்பினை ஈடு செய்திடும் பொருட்டு, கர்ப்பிணித்தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு, டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ.12,000 மாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவியினை தற்போது ரூ.18,000 மாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழக அரசு தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றிற்கு உத்திரவாதம் அளித்திடும் வகையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியினையும், உடுத்தும் உடைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் விலையில்லா வேஷ்டி, சேலைகளையும், மக்களின் இருப்பிடத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம்,

முதலமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டம், அனைவருக்கு வீடு கட்டும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது. குருவிகளுக்கு கூட வீடு இருக்கும் வகையில், தமிழகத்தில் வீடு இல்லாமல் யாரும் இருக்ககூடாது என்பதனை கருத்தில் கொண்டு 13.5 லட்சம் வீடுகள் கட்டி வழங்கிட இலக்கு நிர்ணையிக்கப்பட்டு இதுவரை 6 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும், புரட்சித்தலைவி அம்மாவின் அரசு 2023-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டி வழங்கப்படும்.

புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியில் தான் நமது மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. தற்போது அரசு சட்டக்கல்லூரி நிறுவப்படவுள்ளது. நமது தேனி மாவட்டம் 5 ஆண்டுகளில் முழுமையான வளர்ச்சியடைந்த கல்வி மாவட்டமாக உருவாகும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழக அரசு இன்றைக்கு உழைக்கும் மகளிரின் வேலைச்சுமையினை குறைக்கும் வகையிலும், பயணத்தின் போது மகளிருக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் வகையிலும் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, வாகனத்தின் மதிப்பீட்டில் 50 சதவீத மானியமும் அல்லது ரூ.25,000 மானியமும் வழங்கப்படுகிறது. பெண்கள் வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் தலைகவசம் அணிந்து, சாலை விதிகளை கடைபிடித்திட வேண்டும்.

உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டிற்கு 1776 பயனாளிகளுக்கு ரூ.444.000 லட்சம் மதிப்பிலான மானியத்தொகை வழங்கிட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு 1776 பயனாளிகளுக்கு ரூ.444.000 லட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே 2018-19-ம் ஆண்டிற்கும் ரூ.444 லட்சம் மதிப்பில் 1776 பயனாளிகளுக்கு மானியத்தொகை வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 1776 பயனாளிகளுக்கு மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.தற்போது இவ்விழாவில் 702 பயனாளிகளுக்கு ரூ.175.500 லட்சம் மதிப்பீட்டில் மானியம் வழங்கப்படுகிறது.

சுயஉதவிக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதம் முடிவடைந்த நிலையில் தகுதி வாய்ந்த குழுக்களை ஊக்குவிப்பதற்காகவும் அவைகளின் சேமிப்பு நிதியை அதிகப்படுத்தி அதிகமான உறுப்பினர்கள் உள் கடன் பெறுவதற்காகவும் தமிழக அரசானது சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியை வழங்கி வருகிறது. தேனி மாவட்டத்தில் நகர்புற குழுக்களைச் சார்ந்த 37 குழுக்களுக்கு சுழல்நிதி ரூ.3.70 லட்சமும், 5 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கூட்டமைப்பிற்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.2.50 லட்சமும் வழங்கப்படுகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் தான் தொடர்ந்து 8 ஆண்டுகளாக விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடைபெறும் விழாவில் 177 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவுள்ளது. எனவே, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கொண்டு பொது மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இவ்விழாவில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயபிரித்தா, உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.பாலசந்தர், மகளிர் திட்ட அலுவலர் ம.சிவக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) ஆர்.நிறைமதி, உதவித்திட்ட அலுவலர்கள் ரா.பீமாராஜா, பெ.முருகேசன், மு.முத்துப்பாண்டி, சு.அண்ணாதுரை, வட்டாட்சியர்கள் செந்தில்முருகன், உதயராணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.எம்.சையதுகான், ஆர்.பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.