தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டில் 29-வது பெட்ரோல், டீசல் பங்க் : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

காஞ்சிபுரம்:-

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு நகரில் கூட்டுறவுத்துறையின் 29வது பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தின் அருகில் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஊரகத்தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் திறந்து வைத்து, 649 பயனாளிகளுக்கு சுமார் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நேரடிக் கடன், பயிர் கடன், வீட்டு அடமானக் கடன், பண்ணை சாரா கடன், வியாபாரக் கடன், டாப்செட்கோ கடன், மகளிர் சுய உதவிக் குழுக் கடன், சிறு வணிகக் கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் பேசுகையில், தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மிகசிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் அம்மா வழியில் நடைபெறும் ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறையின் கீழ் 2403 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 120 புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 1946 நியாய விலைக் கடைகளுக்கான புதிய கட்டடங்கள் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) கு.கோவிந்தராஜ், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், சாலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் ச.ஆறுமுகம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.மரகதம் குமரவேல், மண்டல இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் ஆர்.பாபு, தலைவர் எம்.கூத்தன், துணைத்தலைவர் பி.வைரமுத்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொது மேலாளர் குமாரவேல், செங்கல்பட்டு நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ரா.செந்தில்குமார், செங்கல்பட்டு கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சி.விநாயகம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.