சிறப்பு செய்திகள் மற்றவை

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மழை சேதம் குறித்து முதலமைச்சர் அவசர ஆலோசனை…

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. வரலாறு காணாத வகையில் அவஞ்சியில் 92 செ.மீ. மழை பெய்தது. சற்றும் எதிர்பாராமல் பெய்த இந்த மழையினால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். சாலைகள் துண்டிக்கப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்டது. இவையாவும் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென நிகழ்ந்த விபத்தை போன்றதாகும்.

அங்கு கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டெடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வேண்டிய நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்தது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுமாறும், மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை செய்து கொடுக்குமாறும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு முதலமைச்சர் ஆணை பிறப்பித்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அங்கு சென்று ஆய்வு நடத்தி வேண்டிய மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். மழையினால் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு முதலமைச்சர் தலா ரூ.10 லட்சம் வழங்குமாறு ஆணை பிறப்பித்தார்.

இதற்கிடையே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீலகிரி மாவட்டத்துக்கு நேரில் சென்று மாவட்ட அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேனி நாடாளுமன்ற தொகுதி கழக எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, சூடாக பதிலளித்த துணை முதலமைச்சர், அரசை குறை கூறுவதே அவருக்கு வேலை என்று கூறினார்.

இந்நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை சேதங்கள் மற்றும் நிலச்சரிவு குறித்து நேற்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த தென்மேற்கு பருவமழையினால் பெரும் சேதம் ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. உடனடியாக துணை முதலமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நேற்று அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் க.சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மற்றும் எஸ்.கே.பிரபாகர், ஹர்மந்தர் சிங், ராதாகிருஷ்ணன், பீலே ராஜேஷ், விக்ரம் கபூர், ககன்தீப் சிங்பேடி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பருவமழை மீண்டும் பெய்யும் சூழலில் அங்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் மற்றும் மீட்பு, நிவாரண பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்தார்.