தற்போதைய செய்திகள்

குறைந்த மின்அழுத்தம் உள்ள பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை – சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி உறுதி…

சென்னை:-

விவசாயிகளுக்கு பகலிலும், இரவிலும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறைந்த மின் அழுத்தம் உள்ள பதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அளித்த பதில் வருமாறு:-

உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்:- விருதுநகர் தொகுதி, விருதுநகர் ஒன்றியம், ப.முத்துலிங்காபுரம் கிராமத்தில் கூடுதல் மின்மாற்றி அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் பி.தங்கமணி:- உறுப்பினர் கோரிய பகுதி ப.முத்துலிங்கபுரம் என்று சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் அதிகாரிகளுடன் கலக்கும்போது வி.முத்துலிங்கபுரம் என்று சொல்லியிருக்கிறார்கள். வி.முத்துலிங்கபுரத்தில் ஏற்கனவே 100 கே.வி.ஏ மின்மாற்றி இருக்கின்றது. அங்கே 90 கே.வி.ஏ அளவுக்கு மின்பளு இருக்கின்றது. அதனைக் கருத்தில் கொண்டு தான் அதிக மின்னழுத்தம் கொண்டு வருவதற்காக 2.23 கிலோ மீட்டர் அளவுக்கு ஏற்கனவே இருந்த மின்ஒயர்களை மாற்றி சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்:- விருதுநகர் தொகுதி, விருதுநகர் ஒன்றியம், வி.முத்துலிங்கபுரம் கிராமம் விவசாயம் நிறைந்த ஊராகும். இந்த கிராமத்தை ஒட்டியிருக்கக்கூடிய சுராம்பட்டி, கட்டணாம்பட்டி, பெத்துசெட்டிபட்டி கிராமங்களெல்லாம் அருகிலே இருக்கக்கூடிய காரணத்தினால் விவசாயம் அதிகமாக செய்யக்கூடிய அந்த ஊராட்சியிலே குறைந்த மின்னழுத்தம் உள்ள காரணத்தால் விவசாய பம்ப்செட் மோட்டார்களை இயக்குவது சிரமமாக இருக்கிறது. அமைச்சர் அந்த கிராமத்திலே 100 கே.வி.ஏ கொண்ட மின்மாற்றி இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ளார். கூடுதலாக 100 கே.வி.ஏ கொண்ட மின்மாற்றி அமைத்துக் கொடுத்தால் அங்கே சிரமமின்றி பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.

அமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் கோரிய அந்த வி.முத்துலிங்கபுரம் கிராமத்தில் ஏற்கனவே 22 விவசாய இணைப்புகள் இருக்கின்றன. 308 வீடுகள் இருக்கின்றன. 15 மேல்நிலைத் தொட்டிகளும், 15 வணிக இணைப்புகளும் இருக்கின்றன. 90 கே.வி.ஏ அளவுக்கு மின்பளு இருப்பது உண்மை தான். உறுப்பினர் சொல்வதற்கு முன்பாகவே ஏற்கனவே 100 கே.வி.ஏ மின்மாற்றி அமைப்பதற்காக மின்கம்பம் எல்லாம் நட்டு டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டது.

கனெக்சன் கொடுக்கின்ற நேரத்தில், அந்த வீட்டின் முன்னால் குடியிருப்பவர், ‘அந்த கனெக்சன் கொடுத்தீர்களென்று சொன்னால் நான் தற்கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டிய காரணத்தினால் இதுகாறும் மின்சப்ளை கொடுக்க முடியாமல் இருக்கின்றது. உறுப்பினர் அந்த தொகுதியைச் சேர்ந்தவர். அந்த இடத்தில் 100 கே.வி.ஏ மின்மாற்றி அமைக்கப்பட்டு, சரியாக இருக்கிறது. இப்பொழுது சொன்னீர்கள் என்றால் கூட மத்தியானமே நாங்கள் கனெக்சன் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். அந்த நபரை அழைத்துப் பேசி நீங்கள் சமாதானம் செய்துவிட்டீர்களென்றால் உடனடியாக மின் இணைப்பு கொடுக்கப்படும்.

உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்: நான் வினாவில் கூறிய கிராமத்தைப் போன்று விருதுநகர் ஒன்றியத்திலுள்ள பாவாலி ஊராட்சி, பாவாலி கிராமத்திலும், சிவஞானபுரம் ஊராட்சி சின்னமானூர்பட்டி கிராமத்திலும், பரவாக்கோட்டை ஊராட்சி புலவக்கோட்டை கிராமத்திலும் குறைந்த மின்னழுத்த மின்சாரமே கிடைக்கிறது. அந்த கிராமங்களுக்கும் தலா 100 கே.வி.ஏ கொண்ட கூடுதல் மின்மாற்றி அமைத்துக் கொடுப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் குறிப்பிட்டுள்ள வி.முத்துலிங்கபுரத்தில் மின்மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றது. மின்இணைப்பு கொடுப்பது மட்டும் தான் பெண்டிங்கில் இருக்கிறது. உறுப்பினர் உடனடியாக அவரிடம் தொடர்பு கொண்டு பேசி சரி செய்வீர்களென்று சொன்னால் இன்றையதினமே கொடுத்து விடுகிறோம். மற்ற பகுதிகளில் மின்பளு குறைவாக இருக்கின்றது அதனால் புதிதாக மின்மாற்றி வேண்டுமென்று சொல்லியிருக்கின்றீர்கள். நீங்கள் சொன்ன பகுதிகளை நாங்கள் குறித்துக் கொண்டிருக்கிறோம். ஆய்வு செய்து தேவைப்படின் மின்மாற்றி அமைத்துக் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

பொதுவாக மின்மிகை மாநிலமாக இருக்கின்றது. அதனால் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்க வேண்டுமென்று உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். பகல் நேரத்தில் கிட்டதட்ட 2,000 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்சாரம் வருகிறது. இப்பொழுது பகலிலே கிட்டத்தட்ட இரண்டு மாதகாலமாக 3 மணி நேரமல்ல, 5 மணி நேரம், 8 மணி நேரம் மின்சாரம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இரவு நேரங்களில் 6 மணி நேரம், 9 மணி நேரம் மின்சாரம் கொடுக்கிறோம். அந்த 9 மணிநேரம் தான் என்ற கணக்கில்லாமல் மின்சாரம் அதிகமாக இருக்கின்றபோது அதிகமாக கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். உறுப்பினர் தங்கம் தென்னரசு கூட அன்று பேசும்போது மும்முனை மின்சாரம் கொடுக்க வேண்டுமென்று கேட்டார். விவசாய மின் இணைப்பில் ஏற்கனவே ஏதாவது தொழிற்சாலைகள் இருந்ததென்றால் இருமுனை மின்சாரமாக வருகின்றபோது அந்த தொழிற்சாலைகள் எல்லாம் பாதிக்கப்படுகிறது என்று சொன்னார். அதை எந்த அடிப்படையில் எப்படி செய்ய வேண்டுமென்று நாங்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். முதலமைச்சருடன் கலந்து பேசி பரிசீலிக்கப்படும்.

ஆர்.டி.சேகர்: என்னுடைய பெரம்பூர் தொகுதியில் 34 மற்றும் 35-வது வார்டுகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவடமாக மாற்றித் தருவார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் பி.தங்கமணி: அன்றையதினமே நான் சொல்லியிருக்கின்றேன். பெரம்பூர் பகுதி உட்பட, கிட்டத்தட்ட 960 கிலோ மீட்டர் அளவுக்கு புதைவடத் தளமாக அமைப்பதற்குண்டான பணிகள் ரூ.2,567 கோடி செலவிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு பகுதியாக இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவருடைய தொகுதியிலே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் தொகுதியிலும் அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் முழுவதுமாக புதைவடத் தளமாக அமைக்க வேண்டுமென்பது தான் அரசினுடைய நோக்கம். நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியாக நாங்கள் அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கின்றோம். பெரம்பூரைப் பொறுத்தவரைக்கும், ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்தார்.