தற்போதைய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அரசு அனுமதிக்காது – ஸ்டாலினுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி…

சென்னை:-

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பேசினார்.

இதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ளார். நாங்களும் இதனை ஒத்துக்கொள்கிறோம்.மத்திய அரசு ஒற்றை லைசென்ஸ் முறையில், ஹைட்ரோ கார்பன் எடுக்க நிறுவனங்களுக்கு ஏலம் விடுகிறது. மத்திய அரசு அனுமதி வழங்கியபோதிலும், தமிழகத்தில் அந்த திட்டத்தை துவக்கவோ, ஆய்வு செய்யவோ, உற்பத்தி செய்யவோ அனுமதி இல்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் அனுமதி பெற்றே ஆக வேண்டும். இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் விண்ணப்பம் அளித்த எந்த நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த திட்டம் தொடர்பாக மறைந்த முதல்வர் அம்மா குழு அமைத்து, அந்த குழுவின் அறிக்கையை பெற்று, அதன் அடிப்படையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தார்.அதே கொள்கையை தற்போது தமிழக முதல்வரும் எடுத்து வருகிறார்.

விவசாயிகளுக்கு பாதிப்பு என்பதாலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பதாலும், நிபுணர் குழு அறிக்கைப்படி ஹைட்ரோ கார்பன் எடுக்க விண்ணப்பித்த எந்த நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதுபோல் எடுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினால், அதற்கு அரசு பொறுப்பு ஆகாது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதிக்காத நிலையில் போராட்டம் நடத்துவது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

அதை தான் நாங்களும் கேட்கிறோம். எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் , இந்த விஷயத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்கிறபோது கொள்கை முடிவு எதற்கு? நீதிமன்றமும் இதே கேள்வியை எழுப்பி இருக்கிறது. பின்னர் எதற்காக போராட்டம் நடத்தி அச்சுறுத்த வேண்டும். இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களாக ஜெயிலுக்கு போகீறேன் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

மத்திய அரசு புதிய ஏல முறையை அறிவித்து வெப்சைட்டில் விவரங்களை பதிவேற்றம் செய்யும்போது, நிறுவனங்கள் விண்ணப்பித்து பொதுஏலம் மூலம் ஒதுக்கீடு பெறுகின்றன. மத்திய அரசிடம் ஒதுக்கீடு பெற்ற போதிலும், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது தொடர்பாக சட்டத்தில் இடம் இருக்கிறது. அதற்கான விதிமுறைகளும் உள்ளன. எனவே தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆரம்பிக்க முடியாது. இப்படி இருக்கும்போது கொள்கை முடிவு எதற்காக? இவ்வாறு ஆவேசத்துடன் பேசினார்.