சிறப்பு செய்திகள்

சுகாதாரத்துறையில் 108 அறிவிப்புகள் – சட்டப்பேரவையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார்…

சென்னை:-

மருத்துவத்துறை வளர்ச்சிக்காகவும், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் 108 அறிவிப்புகளை வெளியிட்டு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த வரவேற்பையும் பெற்றார்.

சட்டப்பேரவையில்  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் 118 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

சென்னையில் 1800 படுக்கை வசதிகளுடன் செயல்படும் மனநல காப்பகம், மனநலம் தொடர்பாக அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வருகிறது. இம்மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்க்காக வரும் நோயாளிகளுக்கு உயர்தர மனநல சேவைகள் வழங்க இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு முதலமைச்சர் ஆணையின்படி சென்னையில் உள்ள மனநல காப்பகத்தில் ஒரு ஒப்புயர்வு மையம் 25.41 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு அவசரகால ஊர்தி சேவை திட்டத்தில் தற்போது 942 அவசர சிகிச்சை ஊர்திகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு அவசர கால ஊர்தி சேவை திட்டத்திற்கு கூடுதலாக 121 அவசர சிகிச்சை ஊர்திகள் 26.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

சுகாதாரத் துறையின் புதிய முயற்சியாக ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை ஒரு மருத்துவமனையிலிருந்து வேறு உயர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக 120 சிறப்பு வாகனங்கள் 19.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

தற்போது மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் மருந்து மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய சென்னையில் மட்டும் ஒரு மருந்துகள் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் மத்திய அரசுடன் இணைந்து 20 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த ஆண்டிற்கு 5000 மருந்து மாதிரிகளை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட மேலும் ஒரு மருந்துகள் ஆய்வுக்கூடம் நிறுவப்படும்.

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சேவைத் திட்டத்தின் கீழ் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஆல்பெர்டு ஹெல்த் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு அவசர மருந்து சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த ஆண்டில் விபத்தின் மூலம் ஏற்படும் இழப்புகள் 8.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இச்சேவையை மேலும் வலுப்படுத்த அரசு மருத்துவமனைகளிலேயே முதன் முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஒரு நடமாடும் சி.டி. ஸ்கேன் கருவி 7 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

தற்போது 27 அரசு மருத்துவமனைகளில் 28 எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் செயல்படுகின்றன. மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் நிறுவப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்படும்.

தற்போது சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகளில் 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவிகள் உள்ளன. நடப்பாண்டில் இந்த வசதியினை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 128 கூறு ஸ்கேன் கருவி வழங்கப்படும்.

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சேவை திட்டத்தின் கீழ் 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய 25 மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை மையங்களில் துரித ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு தேவையான கருவிகள் மற்றும் இதர வசதிகள் 2.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

சென்னை எழும்பூர் மகளிர் மருத்துவமனைக்கு புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வலுப்படத்த 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் CT Simulator கருவி வழங்கப்படும். மேலும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு 1 கோடி ரூபாய் செலவில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி வழங்கப்படும்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக ராஜீ்வ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் எக்மோ சிகிச்சை வசதி 45 லட்சம் ரூபாய் மதீப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரகத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளுக்கு தங்கு தடையில்லா மின்சாரம் வழங்க ேதவைக்கேற்ப ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் கருவிகள் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகம் போலவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும்.

மருத்துவமனைக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கி மக்கள் நல்வாழ்வுத் துறையின் திட்டங்கள் மக்களிடையே முழுமையாக சென்றடையவும், நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்து விரைவில் தீர்வு காணவும், மருத்துவமனையின் மேம்பாடு குறித்த ஆலோசனைகளைப் பெறவும் இக்குழு ஒரு இணைப்பு பாலமாக செயல்படும். நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் பொருட்டு மருத்துவமனை மேம்பாட்டுக் குழு ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஏற்படுத்தப்படும்.

தேசிய தரச்சான்று பெறுவதில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், நமது நாட்டிலேயே முன்னணி வகிக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மருத்துவமனை சூழலை மேம்படுத்துவதற்கான பல்வேறு வெற்றிகரமான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனை வளாகங்களை அங்கு பணிபுரியும் அலுவலர்கள் சுத்தமாகவும், பசுமையாகவும் பேணிக் காப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பாக பராமரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு தூய்மை மற்றும் பசுமை விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் மருத்துவமனையின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் சிறப்புகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாள் மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும்.