தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி…

சென்னை:-

முதலமைச்சர் மீது அபாண்டமாக வீண்பழி சுமத்துகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக சாடினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், நீலகிரி மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முழுமையாக செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அபாண்டமாக பழி சுமத்தியிருக்கிறார். அது மட்டுமல்ல, முதலமைச்சருக்கு வெளிநாடு செல்வதில் தான் ஆர்வம் இருக்கிறதே தவிர மக்களை பற்றி கவலையில்லை என்று புலம்பியிருக்கிறார். ஸ்டாலினை போன்று முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு மர்மமாகவோ, சுற்றுலாவாகவோ செல்லவில்லை. நாட்டின் நலன் கருதி அவர் இந்த வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்ற போது உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டினார்கள். பல நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

அவர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பதற்காகவே முதலமைச்சர் அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளுக்கு செல்கிறார். அங்கு சென்று ஏற்கனவே முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து தொழில் தொடங்குவது பற்றி ஆலோசனை நடத்த இருக்கிறார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஒருவர் வீண்பழி சுமத்தி அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார். இது அவருடைய தகுதிக்கு அழகல்ல.ஸ்டாலினை போன்று முதலமைச்சர் சுற்றுலா செல்லவில்லை. நாட்டின் நலன் கருதி தான் அவர் வெளிநாடு செல்கிறார். ஒரு எதிர்க்கட்சி தலைவர் இதுபோன்று பொறுப்பில்லாமல் பேசுவது அழகல்ல.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.